Last Updated : 06 Sep, 2021 08:30 AM

1  

Published : 06 Sep 2021 08:30 AM
Last Updated : 06 Sep 2021 08:30 AM

368 ரன்கள் இலக்கு: வரலாற்று சேஸிங் செய்யுமா இங்கிலாந்து அணி? பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காத மைதானம் 

இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவி செய்த ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் | படம் உதவி ட்விட்டர்

லண்டன் 


ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

368 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் வரலாற்று சேஸிங்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்து 291 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஹசீப் ஹமீது 43 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 466 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு 7-வது விக்கெட்டுக்கு ரிஷப்பந்த், ஷர்துல் தாக்கூர் இணைதான் காரணம். இருவரும் நிலைக்காவிட்டால், இங்கிலாந்துக்கு 250 ரன்களுக்குள்ளாக எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

7-வது விக்கெட்டுக்கு தாக்கூர், ரிஷப் பந்த் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். முதல் இன்னிங்ஸைப் போன்று தாக்கூர் 2-வது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து 72 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 50 ரன்களில் வெளியேறினார்.உமேஷ் யாதவ் 25, பும்ரா 24 ரன்கள் சேர்த்து கடைசி நேரத்தில் தங்களின் பங்களிப்பை அளித்தனர்.

ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை கடைசியாக இங்கு 1902-ம் ஆண்டு ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை இங்கிலாந்து சேஸிங் செய்ததே அதிகபட்சமாகும். 368 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் அது வரலாற்று சேஸிங்காக பொறிக்கப்படும்.

ஓவல் மைதானத்தில் இதுவரை நடந்த முதல் தரக் கிரிக்கெட் போட்டியில்கூட 350 ரன்களுக்கு மேல் 4 முறை மட்டுமே சேஸிங் செய்யப்பட்டுள்ளதால், இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் அது பிரமாண்டமாகவே பார்க்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணி கடந்த 2009-ம் ஆண்டுக்குப்பின் 2-வது இன்னிங்ஸில் அதிகபட்சமான ரன்களை பதிவு இப்போதுதான் செய்துள்ளது.கடைசியாக 2009-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக நேப்பியரில் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்களை இந்திய அணி பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் 2-வது அதிகபட்ச இலக்காகும். 1967-ம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் 510 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது அதன்பின் இப்போது 466 ரன்கள் சேர்த்துள்ளது. 2007-ம் ஆண்டு இதே ஓவல் மைதானத்தில் இந்திய அணி 664 ரன்கள் சேர்த்திருந்தாலும் அது முதல் இன்னிங்ஸ் ஸ்கோராகும்.

இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸி்ல் 148.2 ஓவர்கள் நிலைத்து பேட் செய்து ஆட்டமிழந்தனர். 2-வது இன்னிங்ஸில் அதிகமான ஓவர்களை 12 ஆண்டுகளுக்குப்பின் பேட் செய்தனர் இந்திய வீரர்கள். கடைசியாக 2009-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நேப்பியரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 180 ஓவர்கள் நிலைத்து பேட்செய்திருந்தனர்.

அதன்பின் இப்போது 12 ஆண்டுகளுக்குப்பின் அதிகமான ஓவர்களை விளையாடியுள்ளனர். இதற்கு முன் ஓவல் மைதானத்தில் 1979ம் ஆண்டு 150 ஓவர்கள் வரையிலும், 1967-ம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 209 ஓவர்கள் வரையிலும் இந்திய அணி பேட் செய்துள்ளனர்.

இங்கிலாந்து அணியும் கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டிக்குப்பின் அதிகமான ஓவர்களை இந்திய அணிக்குத்தான் வீசியுள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ் மிகவும் பொறுப்பான ஆட்டமாகவே இருந்தது. ஆனால், கேப்டந் கோலி (44) ரன்னிலும், 5-வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட ஜடேஜா 17 ரன்னிலும் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதிலும் விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தபின் ஓய்வறைக்குச் சென்று கதவை உதைத்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 291 ரன்கள் தேவை. ஆடுகளம் நேற்று மாலையிலிருந்தே பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என நம்பி ஜடேஜாவை முன்வைத்து கோலி பந்துவீசச் செய்தார். ஆனால், ஜடேஜாவின் பந்துவீச்சில் பந்து டர்ன் ஆகவே இல்லை, 13 ஓவர்கள் பந்துவீசியும் எந்த விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தவில்லை.

கடைசி நாளான இன்று முதல் 25 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால், இங்கிலாந்து வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்துவிடும்.

ஆனால், டிரா செய்ய நினைப்பதைவிட இன்று நாள் முழுவதும் இருப்பதாலும், 10 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் வெற்றி பெறவே இங்கிலாந்து அணி முயலும்.

பந்துவீச்சு எடுக்கவில்லை என்பதற்கு உதாரணமே, நேற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களைச் சேர்த்தபோதே தெரிந்து கொள்ளலாம். இந்திய அணியில் பும்ரா, சிராஜ் தவிர டெக்னிக்கலாக பந்துவீசுவோர் யாரும் இல்லை. உமேஷ், தாக்கூர் சில நேரங்களில் ரன்களை வாரிக் கொடுத்துவிடுவார்கள்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில்தான் அஷ்வின் தேவைப்படுவார். இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறினாலோ, அல்லது தோல்வி அடைந்தாலோ அது அஷ்வினை அணியில் சேர்க்காததன் விளைவு, கோலியின் வறட்டுப் பிடிவாதத்திற்கு கிடைத்த பலன் என தெரிந்து கொள்ளலாம்.

விராட் கோலி 22 ரன்னிலும், ஜடேஜா 9 ரன்னிலும் நேற்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். நிதானமாக ஆடிய ஜடேஜா 17 ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், அதைத்தொடர்ந்து வந்த துணைக் கேப்டன் ரஹானே இந்தமுறையும் சொதப்பி வோக்ஸ்பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

கோலி, ரிஷப்பந்த் ஜோடி சேர்ந்தனர். அரைசதத்தை நோக்கி முன்னேறிய கோலி 44 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 312 ரன்களுக்கு 6 விக்கெட்ட இந்திய அணி இழந்திருந்தது. 7-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், தாக்கூர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் பேட் செய்தனர். ரிஷப் பந்த் பொறுமையாக பேட் செய்ய, தாக்கூர் அதிரடியாக ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசிய தாக்கூர் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரிஷப் பந்த் 105 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

தாக்கூர் 60 ரன்களில் ரூட் பந்துவீச்சில் ஓவர்டேனிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் ரிஷப் பந்த் 50 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பும்ரா(24), உமேஷ் யாதவ் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் உயர வழி செய்தனர்.

148.2 ஓவர்களில் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வோக்ஸ் 3 வி்க்கெட்டுகளையும் ராபின்ஸன், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x