Published : 04 Feb 2016 06:11 PM
Last Updated : 04 Feb 2016 06:11 PM

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயல்பாடுகளை சீரமைக்க முன்னாள் நீதிபதி லோதா கமிட்டி மேற்கொண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற சிறப்பு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கூறியதாவது: “இந்த (லோதா கமிட்டி) பரிந்துரைகள் மரியாதைக்கு உகந்தவையே. நீதித்துறையின் அறிவார்ந்த மற்றும் மதிக்கக்கூடிய உறுப்பினர்களிடமிருந்து இந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் விரிவான முறையில் விவாதித்து, கலந்தாலோசித்து பரிந்துரைகளைச் செய்துள்ளனர். எனவே வழிக்கு வந்து பிரச்சினையை விடுவிக்க வேண்டும்” என்று பிசிசிஐ-க்கு அவர் அறிவுறுத்தினார்.

பிசிசிஐ சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாதே பரிந்துரைகளை முழுதும் நடைமுறைப்படுத்தினால் 'அனைத்து விதமான சிக்கல்களுக்கும்' வழிவகுக்கும். தமிழ்நாடு பதிவுச்சட்டத்தின் கீழ் பிசிசிஐ அங்கீகாரத்தையே இழக்க நேரிடும் மேலும் நாடு முழுதும் வாரியத்துக்கு உள்ள நிலம் சார்ந்த சொத்துக்களிலும் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் உறுப்பினர்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது, பிசிசிஐ-யின் சட்டக்குழு சந்திப்பு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறுகிறது என்றும் கூறினார் சேகர் நபாதே.

ஆனால், நீதிபதி எப்.எம்.ஐ.கலிபுல்லா அடங்கிய இந்த அமர்வு, பிசிசிஐ-யின் சிக்கல்கள் பட்டியலை ஏற்க மறுத்துள்ளது.

தலைமை நீதிபதி தாக்கூர் கேள்வி எழுப்பும் போது, “நீங்கள் கூறுவதையடுத்து எளிமையான தீர்வுகள் உள்ளன. பரிந்துரைகளை அமல் செய்வதிலும் மதிப்பதிலும் பிசிசிஐ-க்கு தடைகளும் சிக்கல்களும் இருந்தால் லோதா கமிட்டி தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் வாரியத்துக்கு உதவட்டும். என்ன கூறுகிறீர்கள் நபாதே?

இந்த பரிந்துரைகள் நேர்மறையானவை, புரிந்துகொள்ளத் தக்கவை, அறிவுக்குகந்தவை. உங்களால் முடியவில்லையெனில் கமிட்டியையே நாங்கள் உங்களை வழிநடத்த கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

இதற்கு வழக்கறிஞர் நபாதே கூறும் போது, பிசிசிஐ-யை 'இடையூறுவாதியாக' எடுத்துக் கொள்ள வேண்டாம். சட்டக்குழு சந்திப்புக்குப் பிறகு ‘பருமையான பரிந்துரைகளுடன்’ வருவோம் என்றார்.

தாக்கூர் கூறும்போது, “எந்த ஒரு அமைப்பு மாற்றமும், செயல் மாற்றமும் அது சார்ந்த பிரச்சினைகளுடனேயே வரும். சரி. லோதா கமிட்டி பரிந்துரைகள் மீதான சந்திப்பில் சட்டக்குழு மட்டும்தான் கலந்து கொள்கிறதா? பிசிசிஐ இல்லையா?” என்றார்.

நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளே அனைத்து தரப்பினரையும் விரிவாக கலந்தாலோசித்த பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த தருணத்தில் பிசிசிஐ-யின் 30 உறுப்பினர்களை கலந்தாலோசிக்கத்தான் வேண்டுமோ என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர்.

இதனையடுத்து வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகள் மீதான பிசிசிஐ தனது திட்டவட்டமான பதிலை அடுத்த விசாரணை தேதியான மார்ச் 3-ம் தேதிக்குள் அளிக்குமாறு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x