Published : 05 Sep 2021 03:31 PM
Last Updated : 05 Sep 2021 03:31 PM
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
இதையடுத்து, 2-வது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி வருகிறது. 3-வது நாள் ஆட்டமான நேற்று 34-வது ஓவரின்போது, ஆன்டர்ஸன் வீசிய ஓவரில் கே.எல்.ராகுல் 46 ரன்கள் சேர்த்திருந்தபோது கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த கேட்ச் பிடிக்கப்பட்ட விதம் சர்ச்சையானதையடுத்து டிஆர்எஸ் முடிவுக்கு ராகுல் சென்றார். மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து ராகுலுக்கு அவுட் வழங்கினார். இதைக் கள நடுவர் அறிவித்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் நடுவரிடம் வாக்குவாதம் செய்து புறப்பட்டார்.
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் வாக்குவாதம் செய்த ராகுலின் செயல் ஐசிசி ஒழுக்க விதிகளுக்கு முரணானது என்பதால் ராகுலுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், “ஐசிசி ஒழுக்க விதிகள் நிலை ஒன்றின் கீழ் சர்வதேசப் போட்டியின்போது, நடுவரின் முடிவுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் வீரர்கள் ஒழுக்க விதிகளை மீறியதாகும். அந்தத் தவறை இந்திய வீரர் கே.எல்.ராகுல் செய்துள்ளார்.
அந்தத் தவறையும் அவர் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்குப் போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
ராகுலுக்கு ஒழுக்கக் குறைவுக்கு ஒரு புள்ளி சேர்க்கப்படும். கடந்த 24 மாதத்துக்குள் இது முதல் குற்றம். ஒரு வீரர் 4 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் ஒழுக்கக் குறைவுக்கு தண்டனைப் புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள், அல்லது 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும். இதில் எது முதலில் வருகிறதோ அது விதிக்கப்படும்.
உண்மையில் கே.எல்.ராகுல் பேட்டின் அவுட்சைட் எட்ஜில் பந்து பட்டுச் சென்றது மூன்றாவது நடுவரின் அல்ட்ரா எட்ஜ் கேமராவில் தெளிவாகத் தெரிந்தது. ராகுலுக்கு நடந்தது அவுட் என்பதை முன்னாள் வீரர்கள் மஞ்சரேக்கர், அகர்கர் இருவரும் வர்ணனையின்போது தெரிவித்தனர். ஆனாலும், ராகுல் ஏற்காமல் நடுவரிடம் முறைத்துச் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT