Last Updated : 04 Sep, 2021 07:54 AM

1  

Published : 04 Sep 2021 07:54 AM
Last Updated : 04 Sep 2021 07:54 AM

இங்கிலாந்து முன்னிலை: ஷமி, அஷ்வின் இல்லாத வெற்றிடம்; வாய்ப்பை பயன்படுத்துவார்களா இந்திய பேட்ஸ்மேன்கள்? பரபரப்பான கட்டத்தில் 4-வது டெஸ்ட்

ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் போல்டாகிய போப் | படம் உதவிட்விட்டர்

லண்டன்


ஒலே போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் ஆட்டத்தால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தை ஆடிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 20 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியைவிட 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 3 நாட்கள் முழுமையாக இருப்பதால், ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம். 2-வது இன்னிங்ஸிற்கு ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும் எனக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி இந்திய அணியின் தூண்களாக சொல்லப்படும் புஜாரா, கோலி, ரஹானே, ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோர் நிலைத்து ஆடினால், 300 ரன்களுக்கு மேல் நல்ல ஸ்கோரில் முன்னிலை பெற முடியும். நாளை மாலைவரை இந்திய அணி தாக்குப்பிடித்து நின்றுவிட்டால், ஆட்டம் இந்திய அணியின் கைவசம் வரக்கூடும்.

ஆனால், புதிய பந்தில் இந்திய பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை இழந்துவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக புதிய டியூக் பந்தை எதிர்கொண்டு ரோஹித் சர்மா, ராகுல், கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் நிலைத்து விளையாடவில்லை.

கடந்த போட்டிகள் அனைத்திலும் முதல் 25 ஓவர்களில் அதாவது புதிய பந்தை எடுத்தவுடன் விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது. மாலை தேநீர் இடைவேளைக்குப்பின் புதிய எடுக்கப்பட்டபோதும் விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆதலால் இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் காலை நேரத்தில் புதிய பந்தில் ஆன்டர்ஸன், ராபின்ஸன், வோக்ஸ் ஆகியோர் பந்துவீச்சில் 25 ஓவர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடித்துவிட்டால் அதன்பின் கவலையில்லை. ஆனால், விக்கெட்டுகளை இழந்தால், 4-வது நாள் முடிவுக்குள் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது.

ரோஹித் சர்மா நேற்று பேட் செய்தபோது, 6 ரன்னில் இருந்தபோது, அவருக்கு கேட்சை ஸ்லிப்பில் ரோரி பர்ன்ஸ் தவறவிட்டார்., இந்த கேட்ச் சிக்கியிருந்தால், ரோஹித் வெளியேறிருப்பார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும், பேட்ஸ்மேன்கள் கரங்களில்தான் இருக்கிறது. குறிப்பாக புஜாரா, கோலி, ரஹானே, ஆல்ரவுண்டர் ஜடேஜா, ரிஷப்பந்த் தங்களின் பொறுப்பை உணர்ந்து பேட் செய்தால் தப்பிக்கலாம்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய ஒலே போப் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பேர்ஸ்டோ, மொயின் அலியுடன் சேர்ந்து போப் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் இங்கிலாந்து அணியை முன்னிலை பெற வைத்தது. பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 89 ரன்களும், மொயின் அலியுடன் 7-வது விக்கெட்டுக்கு 71 ரன்களும் சேர்த்த போப்பின் ஆட்டம் திருப்புமுனையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்று தடுமாறியது. அந்த தடுமாற்றத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்தி இருந்தால், 150 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியைச் சுருட்டியிருக்கலாம். ஆனால், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுக்கவில்லை. இதனால், விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் அனுபவ வீரர்கள் முகமது ஷமி, அஷ்வின் போன்றோர் இதுபோன்ற முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதில் தேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் இல்லாத வெற்றிடத்தை உணர முடிந்தது.

அதுமட்டுமல்லாமல் 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக ஆடி50 ரன்களில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் விக்கெட்டை விரைவாகச் சாய்த்திருந்தால்கூட இந்திய அணிக்கு நெருக்கடி குறைந்திருக்கும். ஆனால், உணவு இடைவேளைக்குப்பின் இந்திய பந்துவீச்சு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரிதாக எந்தவிதமான சிரமத்தையும் அளிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

டேவிட் மலான் 26, ஓவர்டன் ஒரு ரன்னில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஓவர்டன்(1), டேவிட் மலான்(31) விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் விரைவாக வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்தார். இதனால், 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்ற நெருக்கடிக்கு இங்கிலாந்து வந்தது.

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ, ஒலே போப் கூட்டணி ஆட்டத்தின்போக்கை மாற்றினர். உமேஷ், பும்ரா முதல் செஷனில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். ஆனால், ஷர்துல் தாக்கூர்,சிராஜ் பந்துவீச வந்தபின் இங்கிலாந்து ஸ்கோர் ஏறியது. குறிப்பாக ஷர்துல் ஓவரில் 4 பவுண்டரிகளை போப் விளாசினார், சிராஜ் ஓவரிலும் 3 பவுண்டரிகளை பேர்ஸ்டோ, போப் விளாசி நிலைப்படுத்திக்கொண்டனர்.

இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பேர்ஸ்டோ 37 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மொயின் அலியும், போப்பிற்கு நன்கு ஒத்துழைத்து பேட் செய்தார். போப் 92 பந்துகளில் அரைசதம் அடித்தார். 7-வது விக்கெட்டுக்கு மொயின் அலியுடன் சேர்ந்து போப் 71 ரன்கள் சேர்த்தார். மொயின் அலி 35 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். போப் 81 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த ராபின்ஸன் 5 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.

9-வது விக்கெட்டுக்கு வோக்ஸ், ஆன்டர்ஸன் கூட்டணி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். வோக்ஸ் அதிரடியாக ஆடி 58 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x