Published : 02 Sep 2021 09:15 AM
Last Updated : 02 Sep 2021 09:15 AM
லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணியில் அஷ்வின் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற கூட்டணியில்தான் கோலி களமிறங்கியுள்ளார். இதில் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அஷ்வினுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஓவல் மைதானம் தட்டையானது, சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், அஷ்வின் போன்ற சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது அவசியம் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கும் அஷ்வின் ஓவல் டெஸ்டில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். லண்டனில் வெளியாகும் தி டெலிகிராப் நாளேட்டில் தினேஷ் கார்த்திக் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
லண்டன் ஓவல் டெஸ்டில் அஷ்வின் இந்திய அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என நம்புகிறேன். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் தட்டையானது ஓவல் மைதானம், இந்த சீசனுக்கும் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கு முன் நடந்த கவுன்டி போட்டிகளில் சர்ரே அணி மோதிய 3 ஆட்டங்கள் முடிவில்லாமல் இருந்தாலும், அதில் 10 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆதலால், பேட்டிங்கிற்கும், சுழற்பந்துவீச்சுக்கும் இந்த மைதானம் நன்கு ஒத்துழைக்கும்.
நான் விராட் கோலியாக இருந்தால், இதுபோன்ற முக்கியமான டெஸ்டில் புதிய பரிணமாங்களை அறிமுகம் செய்திருப்பேன். அஷ்வின் சிறந்த பந்துவீச்சாளர், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த ஆடுகள உதவி தேவையில்லை.
இங்கிலாந்து அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர், அஷ்வின் போன்ற ஆஃப் ஸ்பின்னர்கள் பந்துவீச்சை இடதுகை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது சிரமம். அதுமட்டுமல்லாமல் வலது கை பேட்ஸ்மேன்களும் அஷ்வின் பந்துவீச்சை எளிதாக விளையாடிவிட முடியாது. குறிப்பாக நக்குல் பால், ப்லோட்டர் பால் போன்றவற்றில் தேர்ந்தவராக அஷ்வின் இருக்கிறார்.
ஆதலால், ஓவலில் உள்ள காலநிலையில் அஷ்வினுக்கு சாதகமாக இருப்பதால், நிச்சயம் 4-வது டெஸ்டில் இடம் பெற வேண்டும். ஆஸ்திரேலியப் பயணத்தில் கூக்கபுரா பந்தில் சிறப்பாக அஷ்வின் பந்துவீசினார், மெல்போர்ன் ஆடுகளத்தில் ஸ்மித்தை லெக் ஸ்லிப்பில் ஆட்டமிழக்கச் செய்த அஷ்வின் பந்துவீச்சை மறக்க முடியாது
அஷ்வின் பந்துவீச்சை ஆஸ்திேரலியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன் இருவருமே பாராட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களைப் போல், ஓவல் மைதானமும் பவுன்ஸருக்கு நன்கு ஒத்துழைக்கும். அஷ்வின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்த மைதானம் அவருக்கு சிறப்பானதாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை அஷ்வினை வைத்தே முதல் ஓவரை கோலி தொடங்க வைக்கலாம். அஷ்வின் சிறப்பு என்னவென்றால், பந்து நன்றாக காற்றில் டாஸாகி பிட்ச்சாகும் போது பேட்ஸ்மேன்கள் கணித்து ஆட முடியாது, சிறிய தவறு செய்தாலும் விக்கெட்டை இழந்துவிடுவார்கள். புதிய பந்திலும் பந்துவீச அஷ்வின் தேர்ந்தவர்.
ஆதலால், முதல் ஒரு மணிநேரத்தில் விக்கெட் வீழ்த்த வேண்டுமென்றால் அஷ்வினுக்கு விராட் கோலி வாய்ப்பு வழங்கலாம். 4-வது டெஸ்ட் போட்டியில் அஷ்வின்இடம் பெற்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய துருப்புச் சீட்டாக இருப்பார்
இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT