Published : 31 Aug 2021 05:53 PM
Last Updated : 31 Aug 2021 05:53 PM
டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் மற்றொரு வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.
2015-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி 63) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்த தமிழகத்தின் தங்கவேலு இந்த முறை வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது, வரும் செப்டம்பர் 5-ம் தேதிவரை போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவுக்கான போட்டிகள் இன்று நடந்தன. இந்தியா சார்பில் தங்கவேலு, சரத் குமார், வருண் பாட்டி, அமெரிக்காவின் சாம் கிரீவ் உள்ளிட்ட 7 பேர் பங்கேற்றனர். இதில் 3 வீரர்கள் இந்தியர்கள். ஒவ்வொரு வீரருக்கும் சிறந்த உயரத்தை எட்ட 3 வாய்ப்புகள் வழங்கப்படும்.
இதில் முதல் வாய்ப்பில் தங்கவேலு, சரத் குமார் இருவரும் 1.73 மீட்டர் உயரம் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தனர், ஆனால், வருண் வாய்ப்பைத் தவறவிட்டார். தங்கவேலு, சரத் குமார் இருவரும் 1.77 மீட்டர், 1.80 மீட்டர் எனத் தொடர்ந்து உயரத்தைக் கடந்து சென்றனர்.
1.83 மீட்டர் உயரத்தை முதல் முயற்சியிலேயே தங்கவேலு, சரத் குமார் இருவரும் தாண்டி பதக்கத்தை நோக்கி முன்னேறினர். இவர்களுக்குப் போட்டியாக அமெரிக்க வீரர் சாம் முன்னேறினார்.
1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதில் சரத் குமார், தங்கவேலு இருவரும் முதல் மற்றும் 2-வது முயற்சியில் தவறவிட்டனர். ஆனால், தங்கவேலு 3-வது முயற்சியில் தாண்டி சாதனை படைத்தார். பாராலிம்பிக்கில் தங்கவேலுவின் அதிகபட்ச உயரம் தாண்டுதல் இதுவாகும். ஆனால், தனது 3-வது முயற்சியிலும் சரத் குமார் தாண்ட முடியாததால், வெண்கலப் பதக்கம் வென்றார்.
1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதில் முதல் இரு முயற்சிகளிலும் இந்தியாவின் தங்கவேலுவும், அமெரிக்காவின் சாம் கிரீவும் தோல்வி அடைந்தனர். 3-வதுமுயற்சியில் இருவரும் தோல்வி அடைந்தால், தங்கப்பதக்கம் பிரித்து வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வீரர் சாம் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதால், தங்கவேலு தாண்ட முடியாததால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT