Published : 31 Aug 2021 05:29 PM
Last Updated : 31 Aug 2021 05:29 PM
2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ள நிலையில் இரு அணிகள் வருகையால் பிசிசிஐ அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கோடியில் வருமானம் கிடைக்க உள்ளது.
ஐபிஎல் டி20 தொடர் 14-வது ஆண்டாக நடந்து வருகிறது. தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு 10 அணிகளாக உயர்த்தப்பட உள்ளன. இதற்காக குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமமும், மற்றொரு நிறுவனமும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய அணிக்கான விண்ணப்பத்துக்கு மட்டும் எந்த நிறுவனம் விண்ணப்பித்தாலும் ரூ.75 கோடி டெபாசிட் செலுத்த வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் கூடுதலாக 2 அணிகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான விருப்ப மனு தாக்கல் செய்யும்போது ரூ.75 கோடி செலுத்த வேண்டும். இரு அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.1700 கோடி முதலில் நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணிகள் புதிதாக வருவதன் மூலம் பிசிசிஐ அமைப்புக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இந்த இரு அணிகளை வாங்கவும் ஏராளமான புதிய நிறுவனங்கள் விருப்பமாக உள்ளன. பிசிசிஐ எதிர்பார்ப்பின்படி ரூ.5 ஆயிரம் கோடி உறுதியாகக் கிடைக்கும்,
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 74 போட்டிகள் நடத்தப்பட ஆலோசிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே விருப்ப மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் புதிய அணிகள் அகமதாபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.
அதானி குழுமம், ஆர்பிஜி சஞ்சீவ் கோயங்கா குழுமம், டோரன்ட் மருந்து நிறுவனம், புகழ்பெற்ற தனியார் வங்கி ஆகியவை அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இரு அணிகள் புதிதாக வரும்போது, பிசிசிஐ அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கோடியில் பணமழை கொட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT