Published : 31 Aug 2021 01:13 PM
Last Updated : 31 Aug 2021 01:13 PM
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானைத் தொடர்ந்து ஷாகித் அப்ரிடியும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபான்கள், பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க, நேட்டோ படைகளும் ஆப்கனை விட்டு முழுமையாக வெளியேறிவிட்டன.
கடந்த கால ஆட்சியைப் போல் இல்லாமல் இந்த முறை தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தலிபான்கள் மனநிலையில் மாற்றம் வராது என்றே பெரும்பாலான வரலாற்றியயல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் நைலா இனாயத் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.
ஷாகித் அப்ரிடி அளித்த பேட்டியில், “தலிபான்கள் இந்த முறை சாதகமான, நேர்மறையான மனநிலையில்தான் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கிரிக்கெட் விளையாட அனுமதித்ததுபோல், பெண்கள் பணிக்குச் செல்ல இந்த முறை தலிபான்கள் அனுமதிப்பார்கள், அரசியலில் பெண்கள் ஈடுபடவும் தலிபான்கள் அனுமதிப்பார்கள். தலிபான்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல ஆதரவு தரக்கூடியவர்கள், அவர்கள் கிரிக்கெட்டை விரும்பக்கூடியவர்கள்” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பல முறை தலிபான்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் இம்ரான்கான் அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் அரசு 30 லட்சம் ஆப்கன் அகதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதில் பெரும்பாலானோர் பஸ்தூன் இனத்தவர்கள், அதாவது தலிபான்கள் போராளிகளைப் போன்ற பிரிவினர்.
சில முகாம்களில் 5 லட்சம் அகதிகள் வசிக்கிறார்கள், சில முகாம்களில் 10 லட்சம் அகதிகள் இருக்கிறார்கள். தலிபான்கள் என்பவர் நீங்கள் நினைப்பது போன்று ராணுவத்தினர் அல்ல சாதாரண மக்கள்தான். சில நூறு தலிபான்கள் முகாம்களில் இருக்கிறார்கள் என்பதற்காக முகாம்களில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் எவ்வாறு வேட்டையாட முடியும். தலிபான்களுக்கு அடைக்கலமாகியுள்ளார்கள் என எவ்வாறு கூறலாம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
கடந்த மாதம் இம்ரான்கான் அளித்த பேட்டியில், “எங்கள் நாடு அனைத்து ஆப்கன் தலைவர்களையும் சென்றடைகிறது. மற்ற நாடுகளிடமும் பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT