Published : 27 Aug 2021 10:33 AM
Last Updated : 27 Aug 2021 10:33 AM
இந்திய அணியின் மனோபலம், நம்பிக்கை குறைந்துவிடவில்லை. 3-வது டெஸ்டில் நாங்கள் மீண்டு வருவதற்கு தேவையான கால அவகாசம் இருக்கிறது என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
லீட்ஸில் நடந்து வரும் 3-வதுடெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் சேர்த்து 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அதிரடியாக ஆடிய கேப்டன் ரூட் இந்த ஆண்டில் 6-வது சதத்தையும், டெஸ்ட் அரங்கில் 23-வது சதத்தையும் நிறைவு செய்தார். இங்கிலாந்து அணி தற்போது வலுவான நிலையில் இருப்பதால், ஆட்டத்தை போக்கை இங்கிலாந்து அணிதான் நிர்ணயிக்கும் நிலையில் இருக்கிறது.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் எவ்வாறு விளையாடப் போகிறது என்பதைப் பொறுத்து இன்னிங்ஸ் தோல்வியா அல்லது டிரா செய்யுமா என்று தெரியவரும்.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ மனரீதியாக எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. இதற்குமுன் பல டெஸ்ட்போட்டிகளை 3 நாட்களில் முடித்திருக்கிறோம், ஏன் 2 நாட்களில்கூட முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்.
உங்களுக்கான மோசமான நாள் வரும்போது சந்திக்க வேண்டும் அந்த நேரத்தில் நம்முடைய நம்பிக்கை குறைந்துவிடக்கூடாது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன, 1-0 என்ற கணக்கில் இந்திய அணிதான் முன்னிலையில் இருக்கிறது. எங்கள்திறமையை நாங்கள் நம்புகிறோம், மீண்டு வருவோம் அதற்கான நேரஅவகாசமும் இருக்கிறது.
எதிரணி தரப்பில் பெரிய பாட்னர்ஷிப் அமைக்கப்படும்போது, அதைப் பார்த்து நாம் சோர்ந்துவிடக்கூடாது, தலையைக் குணிந்துவிடக்கூடாது. அந்த பாட்னர்ஷிப்பை உடைக்க வேண்டும், விக்கெட்டை வீழ்த்த வேண்டும். இந்த பேட்ஸ்மேனை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது என்பது குறித்து திட்டமிட வேண்டும்.
முயற்சி செய்து பார்க்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.
ஆதலால், நம்பி்க்கையிழந்து தலையைக் குணிந்துவிட்டால், எதிரணி வீரர்களின் பாட்னர்ஷிப் வலுவடைந்துவிடும், பெரிதாகிவிடும். அந்தபாட்னர்ஷிப்பை உடைத்தால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்
இவ்வாறு ஷமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT