Published : 26 Aug 2021 06:40 PM
Last Updated : 26 Aug 2021 06:40 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பல வீரர்கள் பங்கேற்கவில்லை என்பதால், அதற்கான மாற்று வீரர்களை ஆர்சிபி அணி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அறிவித்துள்ளன.
இதில் ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில், “ஆஸி.வீரர் ஆடம்ஸம்பாவுக்கு பதிலாக இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவும், வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த் சமீராவும், கேனே ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக இங்கிலாந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கார்டனும், நியூஸி வீரர் பின் ஆலனுக்கு பதிலாக டிம் டேவிட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிலிப்ஸ் இதுவரை 25 டி20 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம், 2 அரை சதம் உள்பட 506 ரன்கள் சேர்த்ததையடுத்து சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஆன்ட்ரூ டைக்கு பதிலாக, உலக டி20யின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஷாம்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் மெரிடித்துக்கு பதிலாக ஆஸி.வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸைச் சேர்த்துள்ளது. வங்க தேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்த வாய்ப்பை எல்லிஸ் பெற்றுள்ளார். ஜை ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் அதில் ரஷித் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் சொந்த வேலை காரணமாக, ஐபிஎல் 2-வது பாதி தொடரில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ரூ.15.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கம்மின்ஸ், முதல் சுற்றுப் போட்டியில் 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 66 ரன்களையும் கம்மின்ஸ் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிம் சவுதி இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணியில் இடம் பெற்று விளையாடிய அனுபவம் உள்ளவர். 83 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிம், 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT