Published : 26 Aug 2021 12:05 PM
Last Updated : 26 Aug 2021 12:05 PM
ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் இனவெறிப் பேச்சை எதிர்கொண்ட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மீது பந்தை எறிந்து பிரிட்டன் ரசிகர்கள் சீண்டியுள்ளனர்.
ஹெடிங்லியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடியது. அப்போது பவுண்டரி எல்லையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த பிரிட்டன் ரசிகர்கள் சிலர் சிராஜ் மீது ஏதோ ஒரு பொருளைத் தூக்கி எறிந்தனர்.
அதை சிராஜ் எடுத்துப் பார்த்தபோது அவர் மீது பந்தை ரசிகர்கள் எறிந்தது தெரியவந்தது.
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அளித்த பேட்டியில், “முகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங்கில் இருந்தபோது, அவர் மீது ரசிகர்கள் பந்தை எறிந்துள்ளனர் என நினைக்கிறேன். இதுகுறித்து சிராஜ் கேப்டன் கோலியிடம் தெரிவித்தவுடன், அவரும் வேதனை அடைந்து கோபமடைந்தார். மைதானத்தில் இருக்கும் வீரருடன் ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம். ஆனால், அவர் மீது எந்தப் பொருளையும் வீசி எறியக்கூடாது. இது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல என நான் ஊகிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
27 வயதான முகமது சிராஜ் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். லார்ட்ஸ் டெஸ்ட்டிலும் இந்திய அணி வெற்றி பெறும் நிலைக்கு வந்தவுடன், பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கே.எல்.ராகுல் மீது பாட்டில் கார்க்குகளை ரசிகர்கள் வீசி எறிந்ததும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களால் சிராஜ் குறிவைக்கப்படுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்திலும் முகமது சிராஜ் ரசிகர்களால் குறிவைக்கப்பட்டார்.
முகமது சிராஜுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனவெறியுடன் பேசியதையடுத்து, சில நிமிடங்களுக்குப் போட்டி நிறுத்தப்பட்டது. நடுவரிடம் கேப்டன் ரஹானே புகார் செய்தததையடுத்து, மீண்டும் போட்டி நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT