Published : 26 Aug 2021 10:40 AM
Last Updated : 26 Aug 2021 10:40 AM
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த 50 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சர்வதேச அரங்கில் ஒரு சதம்கூட அடிக்காமல் பேட்டிங்கில் திணறி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 50 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்தார். அதன்பின் கோலி சர்வதேச அரங்கில் எந்த சதத்தையும் அடிக்கவி்ல்லை.
அதிலும் இங்கிலாந்துக்கு வந்தபின் கோலியின் மோசமான பேட்டிங் தொடர்ந்து வருகிறது. ரன் மெஷின் கோலி, இதுவரை டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் போட்டியில் 43 சதங்களும் எடுத்தாலும் கடந்த இரண்டு வருடமாக ஒரு சதம் கூட எடுக்க அடிக்கமுடியாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பதைப் போல் கடந்த 4 இன்னிங்ஸ்களாக கோலி 69 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் லார்ட்ஸ் டெஸ்டில் சேர்த்த 42 ரன்கள்தான் கோலியின் அதிகபட்சமாகும்.
அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்போட்டி என்றாலே கோலிக்கு கிலி ஏற்படுகிறது. ஆன்டர்ஸன் பந்துவீச்சில் விரிக்கும் வலையில் எளிதாக கோலி சிக்கி விடுகிறார்.
லீட்ஸில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஷாட் அடிக்க முயன்று கோலி 7 ரன்னில் வெளியேறினார். இதன் மூலம் கடந்த 7-வது முறையாக ஆன்டர்ஸன் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்துள்ளார்.
அடுத்துவரும் போட்டிகளில் கோலி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லாவிட்டால் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல அடுத்த கேப்டனைக் காலம் வழங்கிவிடும்.
இதற்கு முன் கோலி இருமுறை இதேபோன்று தொடர்ந்து 50 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் இருந்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2011 செப்டம்பர் வரை 24 இன்னிங்ஸ்களாக தொடர்்ந்து சதம் அடிக்காமலும், 2014 பி்ப்ரவரி முதல் அக்டோபர் வரை தொடர்ந்து 25 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமலும் கோலி இருந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் இதுநாள்வரை ஒரு சதத்தைக்கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கும் பேராதிர்ச்சியாக இருந்துவருகிறது.
2019-ம் ஆண்டிலிருந்து கோலியின் டெஸ்ட் போட்டி புள்ளிவிவரங்களைக் காணலாம்.
2019-ம் ஆண்டில் விராட் கோலி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 612 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 2 சதங்கள், 2 அரை சதங்கள். இரு சதங்களுமே இந்தியாவில் அடிக்கப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. சராசரி 68 ரன்களாக இருந்தது.
2020-ம் ஆண்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியகோலி 116 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டில் கோலியின் சராசரி 19 ரன்கள்தான்.
2021-ம் ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடிய கோலி 229 ரன்கள்தான் சேர்த்துள்ளார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும், சராசரி 25 ரன்கள்தான். மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
2018-ம் ஆண்டில் 10 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள், 2 அரை சதங்கள் உள்பட 1,036 ரன்கள் சேர்த்த கோலி, 2019, 2020,2021 ஆகிய 3 ஆண்டுகளில் சேர்த்து 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 சதங்கள், 5 அரை சதங்கள் உள்ளிட்ட, 957 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.
அதாவது 2018-ம் ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக 17 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களைக் கூட எட்டமுடியவில்லை என்றால், அவரின் பேட்டிங் ஃபார்ம் எங்கு போனது?
ரன் மெஷின் ரிப்பேர் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
விராட் கோலி களத்தில் தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து பேட்டிங்கில் கவனத்தைச் செலுத்தினாலே அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துவிடும் என்று பல முன்னாள் வீரர்களும், கிரி்க்கெட் விமர்சர்களும் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், எப்போதெல்லாம் தனது பேட்டிங் மீது விமர்சனங்கள் எழுகிறதோ அப்போது நடக்கும் போட்டிகளில் மைதானத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேட்டைகளைச்செய்து, கை தட்டுங்கள், சத்தமிடுங்கள் எனக் கூறி, கோலி கவனத்தை திசைதிருப்பிவிடுவார்.
ரன் ஸ்கோர் செய்ய முடியாமல் போகும்போதெல்லாம் தனது சேட்டைகள் மூலம் தவறுகளையும், குறைகளையும் கோலி மறைக்க முயல்கிறார். ரன்மெஷின் தன்னை ரிப்பேர் செய்யாவிட்டால், புதிய எந்திரம் களமிறக்கப்படும் என்பதை கோலி மறந்துவிடக்கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT