Published : 07 Jun 2014 12:41 PM
Last Updated : 07 Jun 2014 12:41 PM
1966-ல் நடைபெற்ற 8-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இங்கிலாந்து நடத்தியது. அதில் இங்கிலாந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
பேங்ஸ், மோரி, சார்ல்டன், கிரேவ்ஸ், ஹர்ட்ஸ், ஹன்ட் போன்ற தலைசிறந்த வீரர்களைக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் விளையாடியதால் கூடுதல் பலம் பெற்றது. டி.வி.யில் கறுப்பு வெள்ளையில் ஒளிபரப்பான கடைசி உலகக் கோப்பை போட்டி இதுதான். போட்டியை நேரில் பார்த்தவர்களின் மொத்த எண்ணிக்கை முதல்முறையாக 16 லட்சத்தை தாண்டியது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான பிரேசில் பின்னடைவை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் பல்கேரியாவுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் பிரேசில் வென்றது. இந்த ஆட்டத்தில் பீலேவும், கரிஞ்சாவும் கோல் அடித்தனர்.
ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக பீலே விளையாடவில்லை. இதில் 1-3 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியடைந்தது. அரையிறுதிக்கு பிரேசில் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இருமுறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் முதல்சுற்றுடன் வெளியேறியது. 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே பிரேசில் வென்றது. போட்டியில் பங்கேற்ற 16 நாடுகளில் பிரேசிலால் 11-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
இங்கிலாந்து, போர்ச்சுகல், ஆர்ஜெண்டீனா, வடகொரியா, மேற்கு ஜெர்மனி, உருகுவே, சோவியத் யூனியன், ஹங்கேரி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் மேற்கு ஜெர்மனி இங்கிலாந்து அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதின. இறுதி ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
1966 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 32
மொத்த கோல்கள் - 89
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 2.78
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 16,14,677
டாப் ஸ்கோர்
யூஸ்பியோ (போர்ச்சுகல்) - 9 கோல்கள்
ஹால்லர் (ஜெர்மனி) - 6 கோல்கள்
ஹர்ட்ஸ் (இங்கிலாந்து) - 4 கோல்கள்
பெக்கின்பர் (ஜெர்மனி) - 4 கோல்கள்
போர்க்யான் (சோவியத்) - 4 கோல்கள்
பென் (ஹங்கேரி) - 4 கோல்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT