Last Updated : 19 Aug, 2021 04:56 PM

 

Published : 19 Aug 2021 04:56 PM
Last Updated : 19 Aug 2021 04:56 PM

டி20 உலகக்கோப்பை; இந்தியா 'டாப்'; பாகிஸ்தானுக்கு அழுத்தம் : கம்பீர் கணிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

டி20 உலகக் கோப்பையில் இன்றைய சூழலில் பாகிஸ்தானை விட விராட் கோலி தலைமையிலான இந்திய அணியே நம்பிக்கையில் உயர்வாக இருக்கிறது. ஆனால், எந்த அணியையும் டி20 தொடரைப் பொறுத்தவரை குறைத்து மதிப்பிட முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளன. அந்நாட்டில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன

இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப்- 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும், தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:

''டி20 போட்டித் தொடரில் முதல் ஆட்டமே இந்தியா, பாகிஸ்தான் ஆட்டமாக இருக்கிறது. பாகிஸ்தான் பக்கம் பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது. இன்றைய சூழலில் பாகிஸ்தானை விட, இந்திய அணியே நம்பிக்கையில் உயர்வாக இருக்கிறது. இது டி20 போட்டித் தொடரில் யார் யாரை வேண்டுமானாலும் தோற்கடிக்க முடியும். ஏனென்றால், இது மிகவும் வித்தியாசமான போட்டி, எந்த அணியையும் எளிதாக எடுக்க முடியாது.

உதாரணமாக ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுக்கக் கூடாது. ரஷித் கான் போன்ற இளம் வீரர் எந்த அணிக்கும் திடீர் பின்னடைவை ஏற்படுத்துவார். பாகிஸ்தான் இதுபோலவே எந்த அணியையும் சாய்க்கும். ஆதலால், பாகிஸ்தான் அணி மீது இப்போது இருந்தே அழுத்தம் விழத் தொடங்கிவிட்டது.

குரூப் பி-யில் இந்திய அணியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானும் இருக்கிறது. இந்தத் தொடரில் கணிக்க முடியாத அணியாக, கடும் போட்டியாளராக ஆப்கானிஸ்தான் அணி இருக்கும். ஆதலால், ஆப்கானிஸ்தானைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அந்த அணியில் ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளதால் எளிதாக நினைக்கக் கூடாது.

இந்தத் தொடரில் உண்மையில் பரபரப்பாக இருக்கப்போவது ஏ குரூப் ஆட்டங்கள்தான். இங்கிலாந்து, ஆஸ்திேரலியா, மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா, தகுதிச்சுற்று மூலம் வரும் இரு அணிகள் என இருக்கின்றன. இதில் அரையிறுதிக்கு இரு அணிகள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மே.இ.தீவுகள் அணி எப்போதுமே கணிக்க முடியாத அணி. எந்த நேரத்திலும் வீறு கொண்டு எழும் வீரர்கள், எந்த அணியையும் சாய்க்கும் வலிமையும் திடீரென வரும். இங்கிலாந்து அணி டி20 போட்டியில் தலைசிறந்த அணியாக இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றபின் இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் போட்டியில் அசைக்க முடியாத நிலையில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பற்றி மிகையாக ஏதும் கூறத் தேவையில்லை. முக்கியமான வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்துவிட்டதால், ஆபத்தான அணியாக மாறிவிட்டது''.

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x