Published : 16 Aug 2021 10:53 AM
Last Updated : 16 Aug 2021 10:53 AM
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கிபின், தலிபான்கள் பெரும்பாலான மாகாணங்களைத் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர். காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கானி, அங்கிருந்து தஜிகிஸ்தான் தப்பிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காபூலில் அதிபர் மாளிகையையும் தலிபான் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. பிரிட்டனில் 100 பந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் ரஷித் கான் டிரன்ட் ராக்கெட்ஸ் அணிக்காகவும், முகமது நபி லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காவும் விளையாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பிசிசிஐ உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பங்கேற்பார்கள் என நம்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இப்போதே எந்தக் கருத்தையும் கூற முடியாது. ஆனால், ரஷித் கான் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் ஐபிஎல்டி20 தொடரில் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தனர்.
பிரிட்டனில் நடந்துவரும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 21-ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் ரஷித் கான், முகமது நபி இருவரும் தங்களின் குடும்பத்தினரைச் சந்திக்க ஆப்கானிஸ்தான் செல்வார்களா அல்லது ஐபிஎல் தொடரில் பங்கேற்க வருவார்களா எனத் தெரியவில்லை.
ஒருவேளை ரஷித் கான், முகமது நபி இருவரையும் பிரிட்டனில் தங்கியிருக்கக் கூறி, இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்குப் புறப்படும்போது அவர்களோடு இணைந்து செல்லுமாறு பிசிசிஐ கேட்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷித் கான், முகமது நபி இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளைாயாடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ விரைவில் ஆலோசிக்கும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT