Published : 15 Aug 2021 04:54 PM
Last Updated : 15 Aug 2021 04:54 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 2-வது பகுதியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
அக்டோபர் மாதம் டி 20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெற இருப்பதால், அதற்கான பயிற்சிக் களமாக ஐபிஎல் டி20 தொடர் இருக்கும் என்பதால், அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் அணிகளுடன் டி20 தொடரை அடுத்த மாதம் விளையாட ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் தொடர் இருப்பதால், உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக இரு தொடர்களையும் பயிற்சி ஆட்டமாக மாற்றவும் ஆஸ்திரேலிய வாரியம் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2-வது பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து, மீதமுள்ள 36 ஆட்டங்கள் 27 நாட்களில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது. துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களி்ல போட்டி நடத்தப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த 2 நாட்களில் டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் தொடரை இந்தியாவில் நடத்தவே ஆப்கானிஸ்தான் திட்டமிட்டிருந்தது. ஆனால், டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்தொடரில் பங்கேற்ற டேவிட் வார்னர், மேக்வெல், ஸ்டீவ்ஸ்மித், ஸ்டாய்னிஷ், ஜை ரிச்சார்டஸன், கேனே ரிச்சார்டஸன், டேனியல் சாம்ஸ் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பாட் கம்மின்ஸ்,தனக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் 2-வது பகுதியில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஹோஸ் ஹேசல்வுட், ரிலை மெரிடித், டேன் கிறிஸ்டியன், ஹென்ரிக்ஸ், மிட்ஷ் மார்ஷ், ஜேஸன் பெஹரன்டார்ப், ஆடம் ஸம்பா, ஆன்ட்ரூ டை, நாதன் கூல்டர் நீல்,கிறிஸ் லின், பென்கட்டிங், ஜோஸ் பிலிப் ஆகியோரும் வருவது உறுதியாகியுள்ளது.
ஹேசல்வுட், மார்ஷ், பிலிப் ஆகிய 3 வீரர்களும் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை, ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT