Published : 15 Aug 2021 09:16 AM
Last Updated : 15 Aug 2021 09:16 AM
ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால் லண்டனில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு பெரிய தொந்தரவாகவும்,சவாலாகவும் இருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் 22-வது சதத்தையும், லார்ட்ஸ் மைதானத்தில் 6-வது சதத்தையும் நிறைவு செய்து 180(18பவுண்டரி) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக ரூட் சதத்தை பதிவு செய்துள்ளார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 64, 109 ரன்கள் சேர்த்த ரூட் இந்த டெஸ்டில்முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுடன் உள்ளார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 128 ஓவர்களில் 391 ரன்களுக்கு ஆட்டமிழந்து 27 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு கிைடத்த இந்த முன்னிலை தார்மீக ரீதியாக நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கும்.
அடுத்த இரு நாட்களும் இரு அணிகளுக்கும் முக்கியமானவை. ஆட்டம் எந்த திசையிலும், யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பக்கூடும் என்பதால், பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இருக்குமா, பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் இருக்குமா என்பது தெரிந்துவிடும்.
ஆனால், லார்ட்ஸ் ஆடுகளத்தைப் பொறுத்தவரை 3-வது நாளான நேற்று வேகப்பந்துவீச்சுக்கு சுத்தமாக ஒத்துழைக்கவில்லை. முதல் இரு செஷன்களில் இந்திய அணிக்கு விக்கெட் கிடைக்காமல் 3-வது செஷனில்தான் விக்கெட் கிடைத்தது.
அதுபோன்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகச் சென்றால் இந்திய அணி நாளை உணவு இடைவேளை வரை பேட்டிங் செய்து இங்கிலாந்துக்கு இலக்கை வைத்து டிக்ளேர் செய்யலாம். அல்லது இந்தியா இன்றைய 4-வது ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டால், நாளை கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் இந்தியப் பந்துவீச்சாளர்கள் போராடிப் பார்த்துவிடலாம்.
டெஸ்ட் போட்டி போன்று இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று பேட் செய்யாமல் நன்றாக ரன்களை ஸ்கோர் செய்து, நாளை காலை தேநீர் இடைவேளைக்குப்பின் டிக்ளேர் செய்துவிட்டு இங்கிலாந்து அணியுடன் போராடிப் பார்க்கலாம்.
இன்று களமிறங்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் கையில்தான் ஆட்டம் இருக்கிறது. விக்கெட்டுகளை விரைவாக இழந்தால், இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிடும்.
அதேநேரம் கடைசி இருநாட்கள் ஆடுகளம் மந்தமாகி, சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தால், அஸ்வினை அணியில் எடுக்காமல் இருந்த தவறுக்கு தண்டனையை கோலி அனுபவிக்க வேண்டியதிருக்கும். ஆதலால், இன்றைய ஆட்டம்தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் நாளாக இருக்கப் போகிறது.
முன்னதாக 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி, 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் ேசர்த்திருந்தது. ரூட் 48 ரன்களுடனும், பேர்்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் இருந்து நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ரூட் 82 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
முதல் செஷனில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். பும்ராவையும், ஷமியையும் பந்துவீச அழைக்காமல், சிராஜ், இசாந்த் சர்மாவுக்கு கோலி வாய்ப்பளித்தார். முதல் இரு செஷன்களிலும் ரூட், பேர்ஸ்டோ இந்தியப் பந்துவீச்சை நன்கு வெளுத்து வாங்கினர். முதல் செஷனில் 97 ரன்களும், 2-வது செஷனில் 98 ரன்களையும் இங்கிலாந்து அணி எளிதாகச் சேர்த்தது.
ஆடுகளமும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாதைப் பயன்படுத்திய ரூட், பேர்ஸ்டோ ரன் குவி்ப்பதை விரைவுப்படுத்தினர். நிதானமாக ஆடிய பேர்ஸ்டோ கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அரங்கில் மீண்டும் அரைசதத்தை 90 பந்துகளில் பதிவு செய்தார். ரூட் 200 பந்துகளில் தனது 22-வது சதத்தை நிறைவு செய்தார்.
இந்த சீசனில் 5 சதங்களை அடித்த முதல் இங்கிலாந்து கேப்டன் எனும் பெருைமயை ரூட் பெற்று, டெஸ்ட் அரங்கில் 9ஆயிரம் ரன்களையும் கடந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லார்ட்ஸ் மைதானத்தில் 6முறையாக சதம் அடித்த ரூட், 150 ரன்களுக்கு மேல் 6-வது முறையாக அடித்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு பயணத்தின்போது, ரூட் பேக்ஃபுட் ஷாட்களை அதிகமாக அடித்து, பலமுறை ஆட்டமிழந்துள்ளார். ஆனால், இந்த முறை அந்த ஷாட்களை பெரும்பாலும் தவிர்த்து, அக்ராஸ் ஆஃப் ஸ்டெம்ப், மிடில் ஸ்டெம்ப் ஷாட்களையே அதிகமாக ஆடினார். குறிப்பாக ஆஃப் சைடில் அதிகமான ஷாட்களை ஆடி ரூட் ரன்களைச் சேர்த்தார்.
பேர்ஸ்டோ 107 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த பட்லர் 23 ரன்னில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் போல்டாகினார். மொயின் அலி 27 ரன்னில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் ராபின்ஸன்(6), ஆன்டர்ஸன்(0)மார்க் உட்(5) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து அணி 341 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த நிலையில் அடுத்த 50 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியத் தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 3 விக்ெகட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT