Published : 12 Aug 2021 09:45 AM
Last Updated : 12 Aug 2021 09:45 AM
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியி்ன் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் பிராட் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயிற்சியின்போது பின்னங்கால் தசைநார் கிழிவால் பிராட் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் சகிப் முகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான லான்கேஷயர் அணி வீரர் சகிப் முகமது, 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் சி டீம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் களமிறங்கி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. அதில் சிறப்பாகப் பந்துவீசிய சகிப் முகமது டெஸ்ட் தொடரில் அறிமுகமாக உள்ளார்.
24 வயதான சகிப் முகமது, 7 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 22முதல்தரப் போட்டிகளில் 65 விக்கெட்டுகளையும் முகமது சாய்த்துள்ளார்.
மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸனும் நேற்று பயிற்சியில் ஈடுபடவி்ல்லை. அவரின் தொடை தசைப்பகுதி இறுக்கமாக இருந்ததால், முன்னெச்சரிக்கையாக பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வெடுத்தார்.
கிறிஸ் பிராட் 2-வது டெஸ்டில் விளையாடி இருந்திருந்தால், அது அவருக்கு 150-வது டெஸ்ட் போட்டியாக இருந்திருக்கும். கடந்த 2007-ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் அல்லது பிராட் இருவரி்ல் ஒருவர் இல்லாமல் இங்கிலாந்து அணி இப்போதுதான் விளையாடுகிறது.
கடந்த 14 ஆண்டுகளாக இருவரும் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்ததில்லை. 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராட் 524 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 6-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் வீழ்த்தாத பிாரட், 2-வது இன்னிங்ஸில் ராகுல் விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸனுடன் சேர்ந்து சகிப் முகமதுதான் களமிறங்க அதிகமான வாய்ப்புள்ளது. மார்க் உட் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவதற்கு வாய்ப்புக் குறைவாகும். அநேரத்தில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரோரி பர்ஸுக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணியிலிருந்து காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸும், தனிப்பட்ட காரணங்களுக்கா பென் ஸ்டோக்ஸும் விலகியுள்ளனர். ஜோப்ராஆர்ச்சர் ஆஷஸ் தொடர் முடியும்வரை களமிறங்கும் நிலையில் உடற்தகுதியுடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT