Published : 11 Aug 2021 03:54 PM
Last Updated : 11 Aug 2021 03:54 PM
தேசிய கிரிக்கெட் அகாடமிக்குப் புதிய இயக்குநருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ கோரியுள்ளதையடுத்து, அந்தப் பதவியில் இருக்கும் ராகுல் திராவிட், இந்திய அணிக்குப் பயிற்சியாளராகச் செல்ல உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு ஏற்ப, இந்திய அணிக்குத் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி டி20 உலகக் கோப்பையுடன் தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவி சாஸ்திரியுடன் பிசிசிஐ அதிகாரிகள் லண்டனில் இது தொடர்பாக ஆலோசனையும் நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி லண்டன் வந்துள்ளது. இந்திய அணிக்கு நீண்ட காலத்துக்குப் பயிற்சியாளராகத் தொடர ரவி சாஸ்திரிக்கு விருப்பமில்லை எனத் தகவல்கள் கிடைத்துள்ளதால், அது தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் அவருடன் ஆலோசனை நடத்தலாம் எனத் தெரிகிறது.
ஆனால், அடுத்த பயிற்சியாளர் பற்றி இப்போது பேசுவது சரியல்ல என்றாலும், பிசிசிஐ தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் ஆகியோர் இன்று லண்டன் சென்றுள்ளனர். அடுத்த பயிற்சியாளர் குறித்து ரவி சாஸ்திரியிடம் நிச்சயம் ஆலோசிப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் எதிர்கால இந்திய அணி குறித்தும், திட்டங்கள், பயணங்கள் குறித்தும் பேசுவார்கள். பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர விரும்பவில்லை என்ற தகவல் உண்மையானால், நிச்சயம் அதுகுறித்து அவரிடம் பிசிசிஐ சார்பில் பேசப்படும்” எனத் தெரிவிக்கின்றன.
ஒருவேளை இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், அது ராகுல் திராவிட் என்பதில் சந்தகேமில்லை.
ஆனால், சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது திராவிட் அளித்த பேட்டி ஒன்றில், “ இந்திய அணிக்கு முழுநேரப் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை’’ எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குப் புதிய இயக்குநருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ கோரியுள்ளது. இந்தப் பதவி என்பது மிகவும் முக்கியமானது, அனைத்து விதமான பயிற்சிகள் குறித்தும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு என்சிஏ தலைவருக்கு இருக்கிறது. வீரர்களைத் தயார்படுத்துதல், வீரர்களை உருவாக்குதல், சர்வதேசப் போட்டிகளுக்குச் செல்லும் முன் வீரர்களின் உடல்நலன், உடற்தகுதியைப் பரிசோதித்து அனுப்புதல் போன்ற பணிகளை என்சிஏ தலைமை செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கு இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி, எதிர்கால இந்திய அணியை வலுப்படுத்தும் பொறுப்பு என்சிஏ தலைமைக்குத்தான் உண்டு. அந்தப் பதவிக்கு திராவிட் வந்தபின் ஏராளமான துடிப்புமிக்க, இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT