Published : 11 Aug 2021 12:44 PM
Last Updated : 11 Aug 2021 12:44 PM
ஐக்கிய அரபுஅமீரகத்தில் ஐபிஎல் டி20தொடரின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சில விதிகளை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியுள்ளது.
ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன.
இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐக்கியஅரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 27 நாட்கள் நடக்கும்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் கூடுதலாக பாதுகாப்பை உருவாக்கும் வகையில் ஏற்கெனவே இருக்கும் விதிகளில் புதிய மாற்றங்களை ஐபிஎல் நிர்வாகம் செய்துள்ளது.
அதில் முக்கியமானது பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்டால், பந்து அரங்கிற்கு வெளியே சென்றாலும், மைதானத்தின் எல்லைக் கோட்டைவிட்டு இருக்கைப்பகுதிக்குச் சென்றால் 4-வது நடுவர் மூலம் புதிய பந்து மாற்றப்படும்.
மைதானத்தின் இருக்கைப் பகுதியிலிருந்து எடுத்துவரப்படும் பந்து சானிடைஸ் செய்தும், ஆல்கஹால் துணி கொண்டு துடைக்கப்பட்டு மறுபடியும் பயன்படுத்தப்படும்.பிசிசிஐ நடத்திய ஆய்வின்படி, பந்தின் மூலம் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு மிகக் குறைவுதான். இருந்தாலும், அதனால் பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய் மைதானத்தில் பேட்ஸமேன் தொட்டாலே சிக்ஸர் பறந்துவிடும், அங்கெல்லாம் எத்தனை பந்து மாற்றப் போகிறார்களோ தெரியவில்லை.
ஐக்கியஅரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் போட்டியைக் காண அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் பார்வையாளர்கள் உயரமான பகுதிகளில் இடைவெளிவிட்டு அமர அறிவுறுத்தப்படுவார்கள்
கழிவறைகள், குளியல்அறை போன்றவற்றில் வீரர்கள், ஊழியர்கள், எச்சில் துப்புதல், காரி உமிழ்தல், தும்முதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட டிஷ்யு காகிதங்களை முறையான குப்பைத்தொட்டியில் சேர்க்க வேண்டும்.
8 அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் 6 நாட்கள்தனிமையில் இருக்க வேண்டும், அந்த காலகட்டத்தில் 3 முறை எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும். அதன்பின்புதான் பயோ-பபுள் சூழலுக்குள் செல்ல முடியும்.
இங்கிலாந்தில் தற்போது விளையாடிவரும் இந்திய வீரர்கள் நேரடியாக பயோ-பபுள் சூழலுக்குள் செல்வார்கள். பயோ-பபுள் டிரான்ஸ்வர் முறையில் தனிமைப்படுத்துதல் தேவையில்லை.
வீரர்கள் கோல்ப் மைதானத்துக்கு செல்லலாம். ஆனால், 24 மணிநேரத்துக்கு முன்பாக,ஐபிஎல் மருத்துவ அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கோல்ப் மைதானம் முழுமையாக, ஐபிஎல் வீரர்கள் பயன்படுத்த எடுக்கப்பட்டுள்ளதால், புதிய யாருக்கும் அனுமதியில்லை.
கோல்ப் கிளப்பில் இருக்கும் மதுபான விடுதி, ரெஸ்டாரன்ட், காபே, உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்ல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோல்ப் லாக்கர் அறையையும்பயன்படுத்த வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோல்ப் மைதானத்தில் உள்ள குளியல் அறையையும் பயன்படுத்த வீரர்களுக்கு தடை உள்ளது.
மைதானத்தில் இடைவேளையின்போது, குடிநீர், குளிர்பானங்கள் வீரர்கள் எடுத்துவரும்போது, அந்தந்த வீரர்களின் பாட்டில்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஒருவீரர் குடித்தவிட்டு மீதமிருப்பதை மற்றொருவர் பருகக்கூடாது.
இவ்வாறு ஐபிஎல் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT