Published : 11 Aug 2021 12:04 PM
Last Updated : 11 Aug 2021 12:04 PM
உலக புகழ்பெற்ற கால்பாந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியில் இணைந்துள்ளார்.
பொருளாதாரத் தடைகள் காரணமாக மெஸ்ஸி மற்றும் ஃபார்சிலோனா அணிக்கு இடையேயான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஃபார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுகிறார் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
” நான் அணியிலிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன். எனது சம்பளத்திலிருந்து 50% குறைத்துக் கொள்ளக்கூட நான் சம்மதித்தேன். நம் அனைவருக்கும் நல்ல காலமும் இருக்கும், கெட்ட காலமும் இருக்கும். ஆனால், எப்போதும் மனிதர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மாறாது ” என்று மெஸ்ஸி தெரிவித்தார்.
இந்த நிலையில் நெய்மார், டி மரியா ஆகியோர் இடம்பெற்றுள்ள பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியில் இரண்டு ஆண்டுக்கான ஒப்பந்தம் அடிப்படையில் மெஸ்ஸி இணைந்திருக்கிறார்.
பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கிளப் அணி பாரிஸை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. மெஸ்ஸி எவ்வளவு தொகைக்கு புதிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும் வருடத்திறகு 41 மில்லியன் டாலர் என்ற அடிப்படையில் பாரிஸ் செயிண்ட் அணிக்கு அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளன.
பாரிஸ் செயிண்ட் அணியில் இணைந்தது குறித்து லியோனல் மெஸ்ஸி செவ்வாய்க்கிழமை கூறும்போது, “
பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க மகிழ்ச்சியடைகிறேன். பாரிஸ் செயிண்ட் அணியுடன் கால்பாந்தட்டம் பற்றிய எனது இலக்கு ஒத்துப் போகிறது. இந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்களின் திறமை பற்றி எனக்கு நன்கு தெரியும். அணியை மேலும் வலுப்படுத்த நான் உறுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
பாரிஸ் செயிண்ட் அணியின் தலைவர் நாசர் அல் கலிஃபீ கூறும்போது, “ பாரிஸ் செயிண்ட் அணியை மெஸ்ஸி தேர்வு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவரை குடும்பத்துடன் பாரிஸுக்கு வரவேற்பதில் பெருமைப்படுகிறோம்” என்றார்.
A new in Paris !
— Paris Saint-Germain (@PSG_inside) August 10, 2021
PSGxMESSI pic.twitter.com/2JpYSRtpCy
தனது 13-வது வயதில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி 21 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 34-வது வயதில் அந்த அணியிலிருந்து வெளியேறுகிறார்.
அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, சிறு வயது முதலே கிளப்புகளுக்கு ஆடும் அளவுக்குத் தனது கால்பந்து திறமையை உயர்த்திக்கொண்டார். ஆனால், இந்தச் சூழ்நிலையில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைப்பட்டது. அவர் வளர வேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால், ஊசியை வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. அர்ஜென்டினாவில் உள்ள பல்வேறு கிளப்புகளும் அவருக்கு உதவ மறுத்தன.
இந்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால், அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தம் மெஸ்ஸியின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT