Published : 10 Aug 2021 05:48 PM
Last Updated : 10 Aug 2021 05:48 PM
நியூஸிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் இதயக் கோளாறு காரணமாக உயிருக்குப் போராடி வருகிறார். தற்போது ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூஸிலாந்து அணியில் கடந்த 1989 முதல் 2006 வரை முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கிறிஸ் கெய்ன்ஸ். 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், 2டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் .
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் லீக் போட்டிகளில் பங்கேற்ற கெய்ன்ஸுக்கு கிரிக்கெட் லீக் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் கடந்த 2008-ம் ஆண்டு கெய்ன்ஸ் சிக்கினார். அதன்பின் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஐபிஎல் நிறுவனர் லலித் மோடிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு அதில் வெற்றியும் பெற்றார்.
ஆனால், அதோடு கெய்ன்ஸுக்கு சோதனைக்காலம் முடியவில்லை. சகநாட்டு வீரர்கள் லூ வின்சென்ட், பிரன்டென் மெக்கலம் இருவரும் தங்களை மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட கெய்ன்ஸ் தூண்டினார் என்று புகார் எழுப்பினர். இந்த சர்ச்சையிலிருந்தும், வழக்கிலிருந்தும் விடுபடுவதற்கு கெய்ன்ஸ் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி, ஏராளமான பணத்தை செலவிட்டார்.
ஒரு கட்டத்தில் வழக்கை நடத்துவதற்கும், குடும்பத்தை நடத்தவும் பணமில்லாமல் தவித்த கெய்ன்ஸ், ஆக்லாந்து லாரி ஓட்டுநர்கள் சங்கத்தில் லாரிகளையும், அதன் பணிமனைகளையும் சுத்தம் செய்யும் பணியில் கெய்ன்ஸ் ஈடுபட்டு ஊதியம் ஈட்டினார். ஒரு மணிநேரத்துக்கு 17 டாலர்கள் ஊதியத்தில் சேர்ந்து கெய்ஸ்ன் வேலை செய்தார். அதன்பின் சூதாட்ட சர்ச்சையிலிருந்து கெய்ன்ஸ் விடுபட்டார்.
கெய்ன்ஸின் நெருங்கிய நண்பரும், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரருமான டியான் நாஷ் கூறுகையில், “ கடைசி காலத்தில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி குடும்பத்தைநடத்த கெய்ன்ஸ் மிகவும் கஷ்டப்பட்டார். யாரிடமும் உதவிபெறாமல் உழைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட கெய்ன்ஸ் லாரி பணிமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். என்னால் முடிந்த உதவிகளை கெய்ன்ஸுக்கு பல செய்துள்ளேன். ஆனால், சூதாட்ட சர்ச்சையில் கெய்ன்ஸ் பெயர் சேர்க்கப்பட்டது நண்பராக எனக்கு வேதனையாக இருந்தது”எனத் தெரிவித்துள்ளார்.
51 வயதாகும் கிறிஸ் கெய்ன்ஸுக்கு உடல்நலக்குறைவால் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது கேன்பெரா நகரில் இதயத்தில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென மயங்கி விழுந்தார்.
தற்போது கேன்பெரேரா நகரில் உள்ளமருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியோடு அவருக்கு தீவிரமான சிகிச்சை தொடர்ந்து அளித்தும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. விரைவில் சிட்னியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு கெய்ன்ஸ் கொண்டு செல்லப்பட உள்ளார்.
கெய்ன்ஸ் உடல்நிலை குறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தித்தொடர்பாளரிடம் நிருபர்கள் கேட்டபோது, “ கெய்ன்ஸ் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிப்பதால், அவர் குறித்த விவரங்களை குடும்பத்தாரிடம் கேளுங்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT