Published : 10 Aug 2021 05:15 PM
Last Updated : 10 Aug 2021 05:15 PM
இந்திய அணிக்கு எதிராக வரும் வியாழக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் தொடங்க இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை அணிக்குள் திரும்ப அழைத்துள்ளது.
இங்கிலாந்து மண்ணில் 2019-ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்காத மொயின் அலி வரும் வியாழக்கிழமை தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்டில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இருவரும் இல்லாத நிலையில், மொயின் அலி வருகை பேட்டிங்கையும், சுழற்பந்துவீச்சையும் பலப்படுத்தும். இங்கிலாந்து அணி இன்று எடுக்கும் பயிற்சியில் மொயின் அலி இணைந்துகொள்வார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் கடந்த 23 மாதங்களாக இங்கிலாந்தில் முதல்தரப் போட்டிகளில் விளையாடிவரும் ஒரே இங்கிலாந்து வீரரும் மொயின் அலிதான். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் மொயின் அலி, திங்கள்கிழமை நடந்த ஃபோனிக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 பந்துகளில் அரை சதம் அடித்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக பிப்ரவரி மாதம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற மொயின் அலி, 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2019-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் மீண்டும் டெஸ்ட் போட்டியில் மொயின் அலி பங்கேற்க உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயின் அலி 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 60 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் டேரீக் அன்டர்வுட், கிரேம் ஸ்வான், ஜிம் லேகர் ஆகியோர் வரிசையில் மொயின் அலி இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொயின் அலி இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு 2014 முதல் 2018-ம் ஆண்டுகளுக்கு இடையே 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 5 சதங்களையும் மொயின் அலி அடித்துள்ளார். மொயின் அலி வருகை நிச்சயம், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கையும், பந்துவீச்சையும் பலப்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT