Last Updated : 10 Aug, 2021 10:22 AM

4  

Published : 10 Aug 2021 10:22 AM
Last Updated : 10 Aug 2021 10:22 AM

என்னாச்சு… ஆஸ்திரேலிய கிரிக்கெட் முடிந்துவிட்டதா? வங்கதேசத்திடம் 62 ரன்களில் சுருண்டு தோல்வி: தரமற்ற பிட்ச்; தூங்குகிறதா ஐசிசி?

ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை வென்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் | படம் உதவி: ட்விட்டர்.

டாக்கா

சஹிப் அல்ஹசன், சைபுதீன் ஆகியோரின் பந்துவீச்சால் டாக்காவில் நேற்று நடந்த கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது வங்கதேச அணி.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் சேர்த்தது. 123 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவர்களில் 62 ரன்களில் ஆட்டமிழந்து 60 ரன்களில் தோல்வி அடைந்தது.

டாக்கா போன்ற குழி பிட்ச்சுகளில் போட்டியை நடத்தி ஒரு அணி தொடரை வெல்வதை ஐசிசி வேடிக்கை பார்க்கிறதா அல்லது தூங்குகிறதா எனத் தெரியவில்லை. கிரிக்கெட்டின் தரம் இதுபோன்ற ஆடுகளங்களால் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் சஹிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய 2-வது வீரர் எனும் பெருமையை சஹிப் அல் ஹசன் பெற்றார். இதற்கு முன் இந்த சாதனையை இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா மட்டுமே செய்திருந்த நிலையில் 2-வது வீரராக சஹிப் அல் ஹசன் இணைந்துள்ளார்.

இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய சஹிப் அல் ஹசன் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சைபுதீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடந்த 16 ஆண்டுகளுக்குப் பின், டி20 வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி எடுத்த மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் சேஸிங்கில் ஈடுபட்டு, மிகக்குறைவான ஸ்கோரில் சுருண்டதும் இந்தப் போட்டிதான்.

இதற்கு முன் கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் 79 ரன்களில் ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்திருந்தது. அதன்பின் வங்கதேசத்திடம் 62 ரன்களில் சுருண்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை டி20 போட்டிகளில் மோதிய அணிகள் எடுத்த ஸ்கோரிலேயே மிகக்குறைவான ஸ்கோர் ஆஸ்திரேலியா எடுத்த இந்த 62 ரன்களாகும். இதற்கு முன் 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் எடுத்திருந்ததே குறைந்தபட்சமாக இருந்தது. அதைவிட மோசமானது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை வங்கதேச அணியைக் குறைத்து மதிப்பிட்டு சோதனைக்கூட எலிகள் போன்று வீரர்களை அனுப்பியதற்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. வார்னர், ஸ்மித், ஸ்டாய்னிஷ், மேக்வெல் போன்ற வீரர்களை நம்பியிருக்கக் கூடாது, புதிய இளம் அணியை உருவாக்கப் போகிறோம் எனக் கையைச் சுட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தரம் தற்போது எந்த அளவு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தத் தொடர் மட்டுமல்ல இதற்கு முன் இங்கிலாந்து, மே.இ.தீவுகள் என இரு தொடர்களில் அனுபவமான பல வீரர்கள் இருந்தபோதிலும் ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்துள்ளது. ஆதலால், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கட்டமைப்பு ரீதியாக ஏதோ சிக்கல் எழுந்துள்ளது தெரியவருகிறது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் (22), மெக்டெர்மார்ட் (17) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர் என்று சொல்வதைவிட கொலாப்ஸ் என்று சொல்லலாம்.

38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 28 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது வேதனைக்குரியதாகும்.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுவிட்டதாக பெருமை கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற மோசமான, குழி பிட்ச்சுகளை அமைத்து வெல்வது என்பது போர்க்களத்தில் எதிரிகளை நிராயுதபாணியாக மாற்றி வெல்வதற்குச் சமமாகும்.

ஒவ்வொரு நாட்டு அணியும் தங்கள் நாட்டுக்கு வரும் எதிரணியினரை எளிதாக வீழ்த்த தங்களுக்குச் சாதமான ஆடுகளங்களை அமைப்பது தொடர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மட்டுமல்ல இந்தியாவிலும் தொடர்ந்து வருகிறது.

இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தபோது, சென்னை சேப்பாக்கத்தில் தரக்குறைவான ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு மோசமான ஆடுகளம் அமைக்கப்பட்டு 2 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்தது. இதுகுறித்து சர்வதேச அளவில் கேள்வி எழுந்தது ஐசிசி விழித்துக்கொண்டது.

இப்போது அதே கதை வங்கதேசத்திலும் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்துவிட்டது எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், ஆடுகளம் மோசமானது என்பதை மறுக்க முடியாது. ஆடுகளம் தரமற்றது, சர்வதேச தரத்துக்கு இல்லை என்பதற்குப் புள்ளிவிவரங்கள்தான் சாட்சியாகும்.

ஐசிசியின் புள்ளிவிவரப்படி இதுவரை நடந்த இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான 96 டி20 தொடரில் ஒரு ஓவருக்கு மிகக்குறைவாக (5.56) ரன்கள் இந்தப் போட்டியில்தான் அடிக்கப்பட்டுள்ளது. இது 96 போட்டித் தொடரில் இதுதான் மிகக்குறைவாகும்.

இதற்கு பேட்ஸ்மேன்கள் மீது குறைகூற முடியாது, முழுக்க ஆடுகளங்கள்தான் காரணம். இந்த 5 டி20 போட்டிகளில் இரு அணிகளும் சேர்ந்து 150 ரன்களைக் கூட எட்டவில்லை என்றால் இதற்குப் பெயர் ஆடுகளமா?

கிரிக்கெட் ரசிகர்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் வருமானத்தைப் பெருக்க வேண்டும் எனும் நோக்கில் கிரிக்கெட் வாரியங்கள் இதுபோன்ற தரமற்ற ஆடுகளங்களை அமைத்து தாங்கள் சார்ந்திருக்கும் அணிக்கு ஆதரவாக நடப்பது தொடர்ந்து வருகிறது.

இதுபோன்ற ஆடுகளங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து அனுமதித்தால் டி20 போட்டியின் தரம் மட்டுமல்ல கிரிக்கெட்டின் தரமே கெட்டுவிடும். இனியும் தூங்காமல் ஐசிசி விழித்துக்கொள்ள வேண்டும்.

வங்கதேச அணியைப் பொறுத்தவரை அந்த முகமது நயிம் (23), சஹப் அல் ஹசன் (11), சவுமியா சர்க்கார் (16), மகமுதுல்லா (19) ரன்கள் சேர்த்தனர். டி20 போட்டி என்பதே ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலையில் பேட்ஸ்மேன்கள் இதுபோன்று குறைவான ரன்களில் ஆட்டமிழப்பதை எவ்வாறு ஏற்க முடியும்?

வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் தங்கள் சொந்த நாட்டு அணி வீரர்களே பேட்டிங் செய்து ஸ்கோர் செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் கிறிஸ்டியன், எலிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x