Published : 09 Aug 2021 08:05 AM
Last Updated : 09 Aug 2021 08:05 AM
நாட்டிங்கில் நடந்த இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிப்படி இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.
கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 157 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ரோஹித் சர்மா(12), புஜாரா(12) ஆட்டமிழக்காமல் இருந்தனர், கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. இலக்கு மிகவும் குறைவாக இருந்ததால், நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நாள் ஆட்டம் தொடங்கும் முன்பாகவே தொடங்கிய மழை பிற்பகல் தேநீர் இடைவேளை வரை இடைவெளி விட்டு பெய்தது. இதனால் ஆடுகளம் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை எனக் கூறி ஆட்டத்தை நடுவர்கள் ரத்து செய்தனர்.
முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களும் இந்திய அணி 278 ரன்களும் சேரத்து 98 ரன்கள் முன்னிலை பெற்றது. 4-வது நாள் ஆட்டத்தை விக்கெட் இழப்பின்றி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கி இங்கிலாந்து அணி, 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதம் அடித்து 104 ரன்களில் வெளியேறினார். இந்தியத் தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், சிராஜ், தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் 4-வது நாள் ஆட்டத்தின் 3-வது செஷனை இந்தியஅணி தொடங்கியது. கே.எல்.ராகுல் 26 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 12, புஜாரா 12 ரன்களுடன் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கடைசி நாளில் வெற்றிக்கு 157 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மழையால் ஆட்டம் ரத்தானதால் டிராவில் முடிந்தது.
2018-ம் ஆண்டில் இந்திய அணி பயணத்தின்போது இதேபோன்று 250 ரன்களுக்குள் சேஸிங் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்த இரு முறையும் கோட்டைவிட்டு தோல்வி அடைந்தது. ஆனால், அப்போது இருந்த நிலைவேறு, நேற்றைய நிலை வேறு கைவசம் 9 விக்கெட்டுகளும் ஏறக்குறைய 6 பேட்ஸ்ேமன்கள் களமிறங்காமல் இருந்ததால், வெற்றி நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம், காலநிலை குளிர்ச்சியாக இருந்ததால்,ஒருவேளை ஆட்டம் நடந்திருந்து, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறி பந்துகள் ஸ்விங் ஆகி இருந்தால், இந்திய அணி தோல்வியில் முடியவும் வாய்ப்பு இருந்திருக்கும்.
2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியைஇரு இன்னிங்ஸ்களிலும் ஆபத்பாந்தவனாக கேப்டன் ரூட் காப்பாற்றினார். அடுத்த டெஸ்டில் முக்கிய வீரர்கள் ஜொலிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்திய அணியில் புஜாரா, ரஹானே, கோலி ஆகியோர் முதல் இன்னிங்ஸில் கோட்டைவிட்டனர். ஒருவேளை முதல் இன்னிங்ஸில் இவர்கள் மூவரும் குறி்ப்பிடத்தக்க ஸ்கோர் செய்திருந்தால், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் வியப்பில்லை. கே.எல்.ராகுலின் ஆட்டம்தான் முதல்இன்னிங்ஸில் இந்திய அணிகவுரவமான ஸ்கோரை எட்டஉதவியது.
ஆட்டம் டிரா ஆனது குறித்து கேப்டன் கோலி கூறுகையில் “ 3வது 4-வது நாளில் மழைவரும் என எதிர்பார்த்தோம், ஆனால், 5-வது நாளில்வந்திருக்கிறது. நல்லவிதமான இலக்கு, எட்டக்கூடிய இலக்கு இருந்தது. நாங்கள் வெற்றி பெறும் நோக்கில் ஆட்டத்தைத் தொடங்கினோம், ஒவ்வொரு பந்தையும் சரியாக எதி்ர்கொண்டு ஆடினோம். மழை இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம், ஆட்டத்தை முடிக்கமுடியாமல் போனது வெட்கமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT