Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது- டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு:113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்; இந்தியா 48-வது இடத்தை பிடித்தது

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. நிறைவு விழாவில் லேசர் ஜாலங்களுடன் அனைத்து நாட்டு தேசிய கொடிகளின் வண்ணங்களை பிரதிபலிக்கும் ஒலிம்பிக் வளையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

டோக்கியா

டோக்கியோவில் நடந்து வந்த ஒலிம்பிக் திருவிழா, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. ஒரு தங்கம் உட்பட 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தை பிடித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஜூலை 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தியா உட்பட 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்துவந்த ஒலிம்பிக் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் ஒட்டுமொத்தமாக 113 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலத்துடன் 88 பதக்கங்களுடன் சீனா 2-வது இடமும், 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடமும் பிடித்தன. இங்கிலாந்து, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்தன.

அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனை எம்மாமெக்கோன் 4 தங்கம், 3 வெண்கலத்துடன் 7 பதக்கங்கள் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 48-வது இடத்தை இந்தியா பிடித்தது.

தடகளத்தில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியவீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுவரலாற்றுச் சாதனை படைத்தார். கடந்த 100 ஆண்டுகளில் தடகளத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். மகளிருக்கான பளு தூக்குதலில் மீராபாய் சானுவும் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் ரவிகுமார் தஹியாவும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மகளிர் குத்துச்சண்டையில் லோவ்லினா போர்கோஹெய்ன், பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆடவருக்கான மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். ஆடவர் ஹாக்கியில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக இந்தியா 6 பதக்கங்களை வென்றிருந்தது.

ஒலிம்பிக் நிறைவு விழா, டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது. நிறைவு விழா அணிவகுப்பில் பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களது நாட்டு கொடியை ஏந்திவந்தனர். இந்தியாவின் மூவர்ணக்கொடியை மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஏந்திச் சென்றார். இதையடுத்து கண்கவர் கலைநிகழ்சிகள் மற்றும் வாணவேடிக்கைகள் இடம் பெற்றன. விழாவின் நிறைவாக ஒலிம்பிக் கொடியை 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் பாரீஸ் நகரின் மேயர் அன்னே ஹிடல்கோவிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் ஒப்படைத்தார்.

அதைத் தொடர்ந்து மைதானத்தில் பெரிய கொப்பரையில் ஏற்றப்பட்டிருந்த ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை ஒலிம்பிக் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் ரசிகர்கள் இல்லாமல் பாதுகாப்புடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்தியகுழுவினரை வாழ்த்துகிறேன். இந்தியா வென்ற பதக்கங்கள் நிச்சயமாக நம் தேசத்தை பெருமைப்படுத்தி, மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. புதிய திறமைகளுடன் வரும்காலங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெறுவதற்கு, விளையாட்டுகளை மேலும் பிரபலப்படுத்த தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நேரம் இது’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x