Published : 08 Aug 2021 04:35 PM
Last Updated : 08 Aug 2021 04:35 PM

நீரஜ் சோப்ராவுக்கு மட்டுமல்ல: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நட்சத்திரங்களுக்கும் புதிய சலுகை

புதுடெல்லி

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மட்டுமல்ல, பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள் அனைவருக்கும் விமான நிறுவனங்கள் சலுகை அளித்துள்ளன.

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்களில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இது தவிர, பஜ்ரங் பூனியா (வெண்கலம்), மிராபாய் சானு (வெள்ளி), பி.வி.சிந்து (வெண்கலம்), லவ்லினா போரோஹெயின் (வெண்கலம்), ஆடவர் ஹாக்கி (வெண்கலம்), ரவிகுமார் தாஹியா (வெள்ளி) ஆகியோர் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்புகிறார்கள்.

இதில் நீரஜ் சோப்ராவுக்கு மட்டும் ஹரியாணா அரசு ரூ.6 கோடி பரிசும், பஞ்சாப் அரசு ரூ.2 கோடியும், சிஎஸ்கே அணி ரூ.1 கோடியும் வழங்குவதாக அறிவித்தன. இது தவிர மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் சொகுசு காரும், தனியார் நிறுவனம் ரூ.25 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளன. இது தவிர இண்டிகோ நிறுவனம், ஓராண்டுக்கு கட்டணமின்றி நீரஜ் சோப்ரா விமானத்தில் செல்லலாம் எனவும் தெரிவித்தது.

நீரஜ் சோப்ராவுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கும் விமான நிறுவனங்கள் சலுகையை அறிவித்துள்ளன.

இதில் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 6 வீரர், வீராங்கனைகளும், ஹாக்கி அணி வீரர்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2025ஆம் ஆண்டுவரை கட்டணமின்றி எங்கள் விமானத்தில் பறக்கும் சலுகையை வழங்குகிறோம். எப்போது அவர்கள் எங்கள் விமானத்தில் பயணித்தாலும் இலவசமாகப் பயணச்சீட்டு வழங்கப்படும்.

தேசத்துக்காக பதக்கம் வென்று வந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்கியதை நினைத்துப் பெருமைப்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

ஸ்டார் ஏர் விமான நிறுவனம் சார்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுவந்த வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் வாழ்நாள் வரை கட்டணமின்றி தங்கள் விமானத்தில் பயணிக்கச் சலுகையை வழங்குகிறோம” எனத் தெரிவித்துள்ளது.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2021, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 7-ம் தேதிவரை விமானத்தில் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று இண்டிகோ நிறுவனம் சலுகையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x