Published : 08 Aug 2021 03:29 PM
Last Updated : 08 Aug 2021 03:29 PM
ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வெல்லும் அளவுக்கு என்னை உயர்த்திய, அழைத்துவந்த அனைவருக்கும் நன்றி என்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர், நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி முனையைச் செலுத்தினார். 2-வது முயற்சியில் அதைவிடக் கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதன்பின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று 2-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் 120 ஆண்டுகளில் ஈட்டி எறிதலில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்குப் பல்வேறு மாநிலங்கள் ரொக்கப் பரிசுகளையும் சலுகைகளையும் அறிவித்துவருகின்றன. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர்கள், அமைச்சர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தில் பணியாற்றிவரும் நீரஜ் சோப்ரா தன்னுடைய இந்த முன்னேற்றத்துக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் அதில் கூறுகையில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உணர்வை இன்னும் நான் அனுபவித்து வருகிறேன். எனக்கு ஆதரவு அளித்த, ஆசிர்வதித்த, இந்த நிலைவரை அழைத்துவந்த, எட்டுவதற்கு உதவி செய்த இந்தியாவில் உள்ள அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணம் எப்போதும் என் வாழ்வில் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT