Published : 08 Aug 2021 12:58 PM
Last Updated : 08 Aug 2021 12:58 PM
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தனியார் நிறுவனங்களில் இருந்தும் பரிசு மழை கொட்டி வருகிறது. சொகுசு கார் முதல் கோடிக்கணக்கான ரொக்கப் பணம் வரை பரிசு மழையில் சோப்ரா நனைந்து வருகிறார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதன்பின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று 2-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி முனையைச் செலுத்தினார். 2-வது முயற்சியில் அதைவிடக் கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை சோப்ரா எறிந்தார். இதையடுத்து, அதிகமான தொலைவு எறிந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்குப் பல்வேறு மாநிலங்கள் ரொக்கப் பரிசுகளை வழங்கி திக்குமுக்காடச் செய்து வருகின்றன.
ஹரியாணா முதல்வர் எம்.எல்.கட்டார் விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின்படி, ரூ.6 கோடி ரொக்கப் பரிசும், முதல்நிலைப் பணியும், ஒரு குடியிருப்பு மனை குறைந்த விலையிலும் வழங்கப்படும்” என அறிவித்தார்.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்தியாவுக்கான பெருமைக்கான தருணம். சோப்ராவின் குடும்பத்தினர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து அனைத்து பஞ்சாப் மக்களும் சோப்ராவால் பெருமை அடைகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விடுத்த அறிவிப்பில் “ ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என அறிவித்தது.
ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பரிசு அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணி விடுத்த அறிவிப்பில், “ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும். அவர் எறிந்த தொலைவைக் குறிப்பிட்டு 8758 என்ற எண்ணில் ஜெர்ஸி வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய விமான நிறுவனமான இன்டிகோ நிறுவனம் விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2021, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 7-ம் தேதிவரை இன்டிகோ நிறுவனத்தில் ஓராண்டுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்தியா வந்தபின் அவருக்குப் புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
எலான் குழுமத்தின் தலைவர் ராகேஷ் கபூர் விடுத்த அறிவிப்பில், “நீரஜ் சோப்ராவுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு தங்கள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் அரசும் பரிசு அறிவித்துள்ளது. மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் விடுத்த அறிவிப்பில், “100 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது வரலாற்று நாள். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பெருமைப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையடுத்து சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT