Published : 07 Aug 2021 03:35 PM
Last Updated : 07 Aug 2021 03:35 PM
ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் சாதி குறித்து அவதூறாகப் பேசியது வெட்கக்கேடு என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், வந்தனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஹரித்துவார் மாவட்டம் ரோஷனாபாத் நகரில் வந்தனா கட்டாரியா வசித்து வருகிறார்.
அர்ஜென்டினா அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்த செய்தி கேட்டதும், இரு நபர்கள் ரோஷனாபாத்தில் உள்ள வந்தனாவின் வீட்டின் முன்பு நின்று நடமானடிக் கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்து சாதிரீதியாக அவதூறு பேசினர். இது தொடர்பாக வந்தனா குடும்பத்தினர் அளித்த புகாரில் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வந்தனாவுக்கு எதிராக சாதி ரீதியாகப் பேசியது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. பலரும் கண்டித்து வருகின்றனர்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் வந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 4 கோல்களை ஒலிம்பிக்கில் அடித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது வந்தனா கட்டாரியா குடும்பத்தினரை சாதி ரீதியாக அவதூறு செய்து சிலர் பேசியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராணி ராம்பால் பதில் அளித்ததாவது:
''வந்தனா வீட்டின்முன் சாதி ரீதியாகப் பேசியது மோசமான சம்பவம். வெட்கக்கேடானது. நாங்கள் நாட்டுக்காக விளையாட்டில் பங்கேற்று கடினமாக உழைக்கிறோம். ஆனால், இதுபோன்று மதரீதியாக, சாதிரீதியாகப் பிளவுபடுத்திப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் இதைக் கடந்து பணியாற்றுகிறோம்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த வீராங்கனைகள் இந்திய அணியில் இருக்கிறார்கள், பல்வறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், எப்போது இந்திய அணிக்குள் வந்துவிட்டோமோ அப்போதிருந்து நாடுதான் முக்கியம். இதுபோன்று பேசியவர்களைக் கண்டாலும், நடத்தையை நினைத்தாலும் வெட்கமாக இருக்கிறது.
நாங்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும் கூட இந்த தேசத்தின் மக்கள் எங்கள் மீது அளவு கடந்த அன்பைச் செலுத்துகிறார்கள். இதுபோன்ற மக்களிடம் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவை ஹாக்கி தேசமாக மாற்ற விரும்பினால், ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை மக்கள் கவனித்துவிட்டார்கள். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தவிர்க்க வேண்டும். இது மோசமான நிகழ்வு''.
இவ்வாறு ராணி ராம்பால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT