Published : 04 Aug 2021 06:24 PM
Last Updated : 04 Aug 2021 06:24 PM
ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்ற லல்லினா, பதக்கத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லவ்லினா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. டோக்கியோ ஒலிம்பிக் பயணம் அற்புதமாக அமைந்தது. பல ஆண்டுகளாக நான் எடுத்த பயிற்சி இறுதியில் எனக்கு ஒலிம்பிக்கில் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.
2024ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன். எனக்காகப் பிரார்த்தனை செய்த எனது ஒட்டுமொத்த தேசத்துக்கும் நன்றி. இந்தப் பதக்கத்தை எனது நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன். இந்திய குத்துச்சண்டை அமைப்பு, இந்திய விளையாட்டுத் துறை, அசாம் அரசு, எனது பயிற்சியாளர் சந்தியா இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமில்லை.
எனது வெற்றியில் எனது குடும்பத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக எனது தாய். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் என்னை உத்வேகப்படுத்திக் கொண்டே இருப்பார்” என்று லவ்லினா பதிவிட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT