Published : 04 Aug 2021 08:44 AM
Last Updated : 04 Aug 2021 08:44 AM

டி20யில் முதல் வெற்றி: 37 ரன்களுக்கு 6 விக்கெட்; ஆஸ்திரேலியாவைச் சாய்த்த வங்கதேச அணி 

டி20 போட்டியில் ஆஸிக்கு எதிராக முதல் வெற்றி பெற்றதை கொண்டாடும் வங்கதேச வீரர்கள் | படம் உதவி ட்விட்டர்

டாக்கா


நசும் அகமதுவின் சுழற்பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசனின் ஆட்டம் ஆகியவற்றால் டாக்காவில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் 23 ரன்கள்வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது. 132 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்து 23 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் டி20 வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் வெற்றியை, வங்கதேச அணி பதிவு செய்துள்ளது. சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்தி 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நசும் அகமது ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பி களமிறங்கிய வங்கதேச அணி, 5 முயற்சிக்குப்பின் ஆஸ்திரேலியாவை டி20 போட்டியில் வென்றுள்ளது. அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 12 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பேட்டிங்கிற்கு மிகவும் கடினமான, பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்காத ஆடுகளத்தில் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஸம்பா, அகர் ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து ஆடி வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன்களைச் சேர்த்தனர். ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் நடத்திய தாக்குதலை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை.

வங்கதேசத் தரப்பில் எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்கவில்லை என்றாலும் சில பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு ரன் சேர்க்க உதவியது. குறிப்பாக ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசன் (36), முகமது நயிம்(30)மகமதுல்லா(20), ஆபிப் ஹூசைன்(23) ஆகியோர் முக்கியப் பங்களிப்புச் செய்தனர், மற்ற வீரர்கள் சொதப்பினர். டி20 போட்டிகளில் 131 ரன்கள் என்பது மோசமான ஸ்கோர்தான் என்றாலும் அந்த ஸ்கோரை வைத்து டிபென்ட் செய்து ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டிவிட்டனர். 131 ரன்களைக் கூட சேஸிங் செய்ய முடியாத அளவுக்காக ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை பலவீனமாக இருக்கிறது என்று யோசிக்க வைக்கிறது.

வங்கதேசத்துக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி முதல் தரஅணியாக அல்லாமல் பேட்டிங்கில் 3-ம் தர அணியாகத்தான் இருக்கிறது. பந்துவீச்சில் ஸ்டார்க், ஹேசல்வுட் தவிர மிரட்டும் தொணியில் யாருமில்லை. ஆடம் ஸம்பா, அகர்இருவரும் இருந்தும் சுழறப்ந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லை. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸம்பா, டை தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அலெக்ஸ் கேரெ, ஹென்ரிக்ஸ், மேத்யூ வேட் என எந்த பேட்ஸ்மேனும் சொல்லிக்கொள்ளும் அளவில் பேட் செய்யவில்லை. மார்ஷ் அடித்த 45 ரன்களும் இல்லாமவிட்டால் ஆஸ்திரேலிய நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

ஆட்டத்தின் முதல் ஓவரில் மெகதி ஹசன் வீசிய முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரே டக்அவுட்டில்ஆட்டமிழந்தார். ஜோஸ் பிலிப் 9 ரன்னில் நசும் அகமது பந்துவீச்சிலும், ஹென்ரிக்ஸ் ஒரு ரன்னில் சஹிப் அல் ஹசன் பந்துவீச்சிலும் வெளியே ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.

11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 4-வது விக்கெட்டுககு மார்ஷ், கேப்டன் மேத்யூ வேட் இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். ஆனால், மேத்யூ(12)ரன்னில் நசும் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின் ஆஸ்திேரலிய பேட்ஸ்மேன்கள் வருவதும்,போவதும் என ஒருவர்கூட நிலைத்து ஆடவில்லை. அகர்(7), டர்னர்(8), ஸ்டார்க்(14) டை(0), ஸ்ம்பா(0) என வரிசையாக வெளியேறினர். ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி கடைசி 37 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

வங்கதேசம் தரப்பில் நசும் அகமது 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான், சோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x