Published : 02 Aug 2021 11:07 AM
Last Updated : 02 Aug 2021 11:07 AM
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி, அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டோக்கியோவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் இந்திய அணி முன்னேறியது.
இந்திய அணி சார்பில் குர்ஜித் கவுர் கோல் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி அறிமுகமானது. அப்போது மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்தது.
அதன்பின் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணி முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் இந்திய வீராங்கனைகள் சற்று பரபரப்புடனே காணப்பட்டனர். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அம்ரோசியா மலோனுக்கு கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டார். 9-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் அடித்த ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டுத் தவறியது. முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது கால்பகுதி நேரத்தில் 22-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய கோல்கீப்பர் ராச்செல் லின்ச்சை ஏமாற்றி, இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்திய அணிக்கு முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அதன்பின் பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முயன்றபோதிலும் இந்திய வீாரங்கனைகளின் வலுவான தடுப்பாட்டத்தால், கோல் அடிக்கமுடியவில்லை. 2-வது கால்பகுதி நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.
அதன்பின் 3-வது மற்றும் 4-வது கால்பகுதி நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT