Published : 06 Feb 2016 03:33 PM
Last Updated : 06 Feb 2016 03:33 PM
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அண்டர் 19 அணி முன்னேறியது. நமீபியாவை 197 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா.
சனிக்கிழமை பாதுல்லவில் நடைபெற்ற காலிறுதியில் முதலில் பேட் செய்த இந்திய இளையோர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய நமீபிய அணி 39 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் இஷான் கிஷன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் இஷான் கிஷன் சோபிக்கவில்லை 6 ரன்களில் 3-வது ஓவரில் கூட்சீயிடம் அவுட் ஆனார்.
ஆனால் அதன் பிறகு ரிஷப் பண்ட், அன்மோல்ப்ரீத் சிங் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 14 ஓவர்களில் 103 ரன்களைச் சேர்த்தனர். அன்மோல்ப்ரீத் சிங் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து அப்போது ஆட்டமிழந்தார்.
பண்ட் அரைசதம் கடந்த நிலையில் சர்பராஸ் கானுடன் இணைந்தார். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 62 ரன்களைச் சேர்த்தனர். ரிஷப் பண்ட் 96 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து ஸ்கோர் 29-வது ஓவரில் 183-ஆக இருந்த போது லெக் ஸ்பின்னர் ராட்டன்பாக் என்ற லெக் ஸ்பின்னர் பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரு சுழற்று சுழற்றினார், சரியாகச் சிக்கவில்லை கேட்ச் ஆனது.
ஆனால் மும்பை பள்ளித் தோழர்களான அர்மான் ஜாபர், சர்பராஸ் கான் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 98 ரன்களை 15 ஓவர்களில் விளாசினர். 44-வது ஓவரில் ஸ்கோர் 281 ரன்களுக்கு அதிகரித்த போது 76 பந்துகளில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் சர்பராஸ் கான் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு அர்மான் ஜாபர் 55 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது ஸ்கோர் 300-ஐக் கடந்து 318 ஆக இருந்தது. கடைசியில் லோம்ரோர் என்ற வீரர் 21 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசி 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ இந்திய அணியின் ஸ்கோர் 349/6 என்று அபார ரன் எண்ணிக்கையை எட்டியது. நமீபியா தரப்பில் வான் லிஞ்சன் என்பவர் மட்டுமே விக்கெட் கைப்பற்றாவிட்டாலும், 10 ஓவர்களில் 42 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார்.
தொடர்ந்து ஆடிய நமீபியா அணி 9.3 ஓவர்களில் 59 என்ற ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்டது. டேவின் என்ற வீரர் 30 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆவேசம் காட்டிய போது வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தாகர், அன்மோல்ப்ரீத் சிங் அருமையாக வீசி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 118/7 என்று ஆன நமீபியா கடைசியில் 39 ஓவர்களில் 152 ரன்களுக்குச் சுருண்டு படு தோல்வி அடைந்தது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன்.
நமீபியா கேட்ச்களை கோட்டை விட்டது. அந்தக் கேட்ச்களை பிடித்திருந்தால் ஒருவேளை இந்தியாவை இன்னும் குறைந்த எண்ணிக்கையில் சுருட்டியிருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT