Published : 28 Jul 2021 02:23 PM
Last Updated : 28 Jul 2021 02:23 PM

ராகுல் திராவிட் இருக்கிறார்… காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்படுகிறார்கள்? இன்சமாம் உல் ஹக் புதிய விளக்கம்

இந்தியஅணியி்ன் பயிற்சியாளர் ராகுல் திராவிட் | கோப்புப்படம்

லாகூர்

இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர் விளையாடச் சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி காயத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என்று கேட்டு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கும் முன்பே ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர்,ஆவேஷ் கான் என 3 பேர் காயமடைந்தனர்.

இந்த 3 பேருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா இருவரும் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர கேப்டன் கோலியும் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறார், ரஹானேவும் தொடைப்பகுதி தசைப்பிடிப்பால் இருக்கிறார். இதனால் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து உடற்தகுதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்திய அணியினருக்கு ஏற்பட்டுள்ள காயம் பற்றி கவலைப்பட வேண்டாம் எனத் தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்து பயணத்தில் இந்திய வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதைப் போலத்தான் ஆஸ்திரேலியத் தொடரிலும் பல வீர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அதை இந்திய அணியின் திறமையான, இளம் வீரர்கள் அருமையாகச் சமாளித்து தொடரை வெற்றி கண்டனர்.

இங்கிலாந்து தொடரில் ஷுப்மான் கில், விராட் கோலி, ரஹானே ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கவலைப்படுகிறார்கள். காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்பட வேண்டும். இந்திய அணியில்தான் காத்திருப்புப் பட்டியலில் அதாவது "பெஞ்ச் ரொம்ப ஸ்ட்ராங்காக" இருக்கிறது, ஏராளமான திறமையான இளம் வீரர்கள் இருக்கும் போது முக்கிய வீரர் ஒருவர் காயமடைந்துவிட்டார் என்று கூறி ஏன் கவலைப்படுகிறார்கள்.

முன்னாள் வீரர் திராவிட் பயிற்சியில் ஏராளமான திறமையான வீரர்கள் உருவாகி வருகிறார்கள். அவரால்தான் இந்திய அணியின் பெஞ்ச் வலிமை அதிகரித்து வருகிறது. திறமையான இளம் வீரர்களை உருவாக்கித் தருவதற்கு திராவிட் இருக்கும் போது வீரர்கள் காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்பட வேண்டும்.

சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் இலங்கையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர், இங்கிலாந்துக்கும் செல்ல இருக்கிறார்கள். ஆதலால் காயத்தை நினைத்து இந்திய அணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சூழலுக்கு ஏற்றார்போல் இளம் வீரர்கள் இந்திய அணியில் உருவாகி, தயாராகி, அனுபவம் வாய்ந்த வீரர்களைப் போல் விளையாடுவார்கள். அதற்கு காத்திருப்பில் இருக்கும் வீரர்கள் எண்ணிக்கைதான் காரணம். எந்த தடைகளிலும் இந்திய அணி மீண்டுவரும், அதற்கு அதிகமான பங்களிப்பு ராகுல் திராவிட்டையே சாரும்
இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x