Published : 27 Jul 2021 04:19 PM
Last Updated : 27 Jul 2021 04:19 PM
இலங்கையில் பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் ஷிகர் தவண் தலைமையிலான இந்திய அணியில் வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இன்று நடைபெற இருந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, டி20 தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது டி20 ஆட்டம் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு வழக்கமாக எடுக்கப்படும் கரோனா பரிசோதனையில் குர்னல் பாண்டியாவுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. அதில் நெகட்டிவ் வந்தால், 2-வது ஒருநாள் டி20 ஆட்டம் அடுத்து நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். ஆதலால், இன்று நடக்க இருந்த 2-வது டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணி வீரர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால், 2-வது டி20 ஆட்டம் நடக்கும் தேதி அறிவிக்கப்படும்.
இதற்கிடையே இலங்கையிலிருந்து பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் இருவரும் இங்கிலாந்து சென்று இந்திய அணியில் இணைய உள்ளனர். இந்நிலையில் கரோனா தொற்றால் அணியில் உள்ள வீரர்கள் தனிமையில் இருப்பதால், இங்கிலாந்து சென்று இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படலாம்.
ஏற்கெனவே இலங்கை வீரர் ஒருவர், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஒருநாள், டி20 தொடர் நடக்கும் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. இப்போது மீண்டும் தேதியை மாற்றி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT