Published : 27 Jul 2021 12:36 PM
Last Updated : 27 Jul 2021 12:36 PM
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயின் தனது அறிமுகப் போட்டியிலேயே காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இந்திய வீராங்கனை லோவ்லினா உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தகக்கது.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவினருக்கான குத்துச்சண்டைப் போட்டியின் 2-வது சுற்று இன்று நடந்தது.
இதில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயினை எதிர்த்து ஜெர்மன் வீராங்கனை நடேன் ஆப்டெஸ் மோதினார். ஏறக்குறைய லோவ்லினாவைவிட 12 ஆண்டுகள் அனுபவம் மிகுந்த நடேனை எதிர்த்து விளையாடுவது என்பது சாதாரணமானது அல்ல.
இரு வீராங்கனைகளுக்குமே இது அறிமுக ஒலிம்பிக் போட்டிதான் என்றாலும் இந்திய வீராங்கனை லோவ்லினா ஆதிக்கமே அதிகமாக இருந்தது. இந்தப் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை நடேனை 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை லோவ்லினா தோற்கடித்தார். முதல் சுற்றில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடிய லோவ்லினா அடுத்த சுற்றில் தடுப்பாட்டத்தையும், நிதானத்தையும் கடைப்பிடித்தார்.
ஜெர்மனியிலிருந்து முதல் முறையாக ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்ற 35 வயதான ஆப்டெஸ், முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் மற்றும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர். ஆப்டெஸ் தற்போது நரம்பியல் அறிவியல் பிரிவில் முனைவராகப் படித்துக்கொண்டே, குத்துச்சண்டைப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT