Published : 25 Jul 2021 05:04 PM
Last Updated : 25 Jul 2021 05:04 PM

ஒலிம்பிக் ஹாக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை; இந்தியாவுக்கு முதல் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆஸி. வீரர்கள் | படம் உதவி ட்விட்டர்

டோக்கியோ

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியை 1-7 என்ற கோல்கணக்கில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது.

கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணியில் கோவர்ஸ் இரு கோல்களை அடித்தார். கோல் அடிக்கத் தடுமாறிய இந்திய வீரர்கள் கடுமையாக முயன்றும் ஒருகோல்தான் அடித்தனர். இந்திய அணி சார்பில் ரூபேந்திர பால்சிங் கோல் அடித்தார்.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க பரபரப்பாக பந்தைக் கடத்தினர். 10-வது நிமிடத்தில் ஆஸி. வீரர் ஜேக்கப் வீட்டன் கோல் அடித்து அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார், முதல் காலிறுதியில் ஆஸி. அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றது.

2-வது காலிறுதியில் இந்திய வீரர்களை ஏமாற்றி, ஆஸ்திரேலிய வீரர்கள் 3 கோல்களை அடித்தனர். 21-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரில் ஸ்பெசலிஸ்ட் ஜெர்மி கார்னர் கோலாக மாற்றினார்.

அடுத்த இரு நிமிடங்களில் ஆஸி வீரர் ஆன்ட்ரூ இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸை ஏமாற்றி 3-வது கோலை அணிக்காக அடித்தார். 26-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜிம் பெல்ட்ஸ் கோல் அடித்து 4-0 என்று முன்னிலைப் பெறச் செய்தார்.

2-வது காலிறுதி முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் இருந்தது. 3-வது காலிறுதியில் 34-வது நிமிடத்தில் இந்திய வீரர் ரூபேந்திர பால்சிங் கோல் அடித்தார். இதனால் 1-4 என்ற கணக்கை இந்திய அணி தொடங்கியது.

40-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டும் கோல் அடித்தனர். பிளேக் கோவர்ஸ் கோல் அடித்து 5-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெறச் செய்தார்.

42-வது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸ் தனது அணிக்காக 6-வது கோலையும், தன்னுடைய 2-வது கோலையும் அடித்து எட்டமுடியா உயரத்துக்கு அணியை கொண்டு சென்றார்.ஆஸி.அணியினரின் கோல் முயற்சியைத் தடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். 3-வது காலிறுதி முடிவில் ஆஸ்திரேலிய அணி 6-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இருந்தது.

4-வது காலிறுதியில் 51-வது நிமிடத்தில் ஆஸி. வீரர் டிம் பிராண்ட் கோல் அடிக்க 7-1 என்ற கணக்கில் ஆஸி அணி ஸ்திரமாக இருந்தது. கடைசிவரை இந்திய அணியால் கோல் அடிக்க முடியாததால்,தோல்வி உறுதியானது. இந்திய அணியை 7-1 என்ற கணக்கில் ஆஸி. அணி வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x