Published : 25 Jul 2021 02:38 PM
Last Updated : 25 Jul 2021 02:38 PM
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனையும், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் இன்று நடந்தன. இதில் 51 கிலோவுக்கான ப்ளைவெயிட் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோமை எதிர்த்து டோமினிகா குடியரசு வீராங்கனை மிக்லினா கார்ஸியா மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டோமினிகா குடியரசு வீராங்கனை மிக்லினாவை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீராங்கனை மேரி கோம் வீழ்த்தினார். முதல் இரு சுற்றுகளில் இரு வீராங்கனைகளும் 19-19 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால், 3-வது சுற்றில் அனுபவசாலியான மேரி கோம், தனக்கே உரிய ஸ்டைலில் சில பஞ்ச்சுகளைக் கொடுத்து மிக்லினாவை சாய்த்தார்.
பான்-அமெரிக்கா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மெக்லினா மேரி கோமைவிட 15 ஆண்டுகள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் வெண்கலம் வென்றவர் என்பது கவனிக்கத்தக்கது.
4 குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் அடுத்த சுற்றில், கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவுடன் மோதுகிறார். கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெலன்சியா வெண்கலம் வென்றவர்.
ஆடவர் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 5-0 என்ற கணக்கில் ஜப்பான் வீரர் மென்ஷா ஒகாசாவாவிடம் தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT