Published : 23 Jul 2021 03:10 PM
Last Updated : 23 Jul 2021 03:10 PM
இலங்கை அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் கடைசிவரை களத்தில் நின்று வெற்றி பெற வைத்ததற்குக் காரணம் தோனியின் ஃபினிஷிங் மேட்ச்சுகளைப் பார்த்ததுதான் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொழும்பு நகரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சஹரும், 9-வது பேட்ஸ்மேனாக வந்த புவனேஷ்வர் குமாரும்தான்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தபோது தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து அணியை வெற்றியின் பக்கம் கொண்டுவந்தனர். தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றிக்குப் பின் இந்திய வீரர் தீபக் சஹர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நான் கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறவைத்தமைக்கு தோனியின் ஃபினிஷிங் செய்த மேட்ச்சுகளைப் பார்த்தது முக்கியக் காரணம். தோனி எவ்வாறு ஆட்டத்தை ஃபினிஷ் செய்கிறார், கடைசிவரை களத்தில் எவ்வாறு போராடுகிறார் என்பதைத் தொடர்ந்து வீடியோக்களில் இந்தப் போட்டிக்கு முன்பாக நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் உதவியாகவும் இருந்தது, உற்சாகத்தையும் அளித்தது.
தோனியிடம் நான் எப்போது பேசினாலும், அவர் எனக்கு வழங்கும் அறிவுரை, "கடைசிவரை போராட வேண்டும், களத்தில் நிற்க வேண்டும்" என்று அடிக்கடி கூறுவார். ஒவ்வொருவருக்கும் ஆட்டத்தை வெற்றியோடு முடிக்க வேண்டும் என்பது ஆசைதான். ஆனால், ஆட்டம் மிகவும் ஆழமாகச் செல்லும்போது, அது ஒவ்வொருவருக்கும் த்ரில்லாக அமைந்துவிடுகிறது.
என்னை ஆல்ரவுண்டர்களாகப் பார்க்கிறார்களா என்பது முக்கியமல்ல. என்னுடன் விளையாடும் சக பேட்ஸ்மேன் நான் விளையாடும் விதத்தைப் பார்த்து நம்பிக்கை பெற வேண்டும், நான் விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டும். பார்ட்னர்ஷிப்பில் இருக்கும் வீரர் நமக்கு ஆதரவாக இருப்பது ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகவும் முக்கியம்.
2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிக்கான சூத்திரத்தை எழுதியவர் பயிற்சியாளர் ராகுல் திராவிட்தான். சீனியர் பிரிவு அணிக்கு முதல் முறையாக திராவிட் பயிற்சி அளித்து வருகிறார். இந்திய ஏ அணிக்கு திராவிட் பயிற்சி அளித்தபோது, அவரின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன்.
இந்திய ஏ அணியில் திராவிட் பயிற்சியில் நான் விளையாடியபோது என்னுடைய பேட்டிங்கை அவர் அதிகமான முறை பார்த்துள்ளார். அந்த நம்பிக்கையில்தான் நான் களமிறங்கும்போது என் மீது திராவிட் நம்பிக்கையோடு இருந்தார். பயிற்சியாளர் நம்மை நம்புவது எப்போதும் நமக்கு ஆதரவாக இருக்கும், மனதளவில் பயிற்சியாளர் துணை இருக்கிறது என்ற ஊக்கத்துடன் விளையாட முடியும்.
குர்னால் பாண்டியா களத்தில் இருந்தபோது நான் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் மட்டும்தான் செய்தேன். ஆனால், புவனேஷ்வர் வந்தபின்புதான் என் மனதில் மாற்றம் ஏற்பட்டு, நான் ஷாட்களை ஆட வேண்டும் எனத் தோன்றியது. அந்த வழியில்தான் நான் ஆட்டத்தைத் தொடங்கினேன், புவனேஷ்வரும் எனக்கு ஒத்துழைத்து, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார்''.
இவ்வாறு சஹர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT