Published : 23 Jul 2021 08:23 AM
Last Updated : 23 Jul 2021 08:23 AM

மே.இ.தீவுகள் அணிக்குள் புகுந்த கரோனா: ஆஸி.யுடன் 2-வது ஒருநாள் போட்டி டாஸ் போட்டபின் திடீர் நிறுத்தம்

மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் | படம் உதவி ட்விட்டர்

கென்சிங்டன் ஓவல்


மேற்கிந்தியத்தீவுகள் அணியில் உள்ள வீரர்கள் அல்லாத ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால், இரு அணி வீரர்களும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இதனால், அடுத்துவரும் ஒருநாள் போட்டிகள் நடக்குமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் 2-வது ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுகமாக இருந்தார். ஆனால், கரோனா தொற்று இருப்பதையடுத்து, இரு அணிகளின் வீரர்கள், போட்டி அதிகாரிகள், டிவி வர்ணனையாளர்கள், கேமிராமேன்கள் என அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இது குறித்து மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் “ மே.இ.தீவுகள் அணியில் வீரர்கள் அல்லாத ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது பின்னர் நடத்தப்படும். கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் டாஸ் போட்டபின் போட்டி நடக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவந்ததையடுத்து, துரதிர்ஷ்டமாக போட்டி நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆதலால் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள், வீரர்கள் அல்லாத ஊழியர்கள், போட்டி நிர்வாகிகள், வர்ணனையாளர்கள், டிவி கேமிராமேன்கள் என அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் வந்தபின் போட்டி நடத்தும் நாள் அறிவிக்கப்படும்.

அனைவருக்கும் கரோனா நெகட்டிவ் வரும் பட்சத்தில் 2-வது ஒருநாள் போட்டி நடத்தும் தேதி அறிவிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

2-வது ஒருநாள் ஆட்டம் மீண்டும் நடப்பது சந்தேகத்துக்குரியதுதான். ஆனால், இரு அணி வீரர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தால், சனி்க்கிழமை 3-வது ஒருநாள் ஆட்டம் நடக்கும். ஆனால், கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்துக்கு பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x