Published : 02 Feb 2016 06:50 PM
Last Updated : 02 Feb 2016 06:50 PM

பந்து வீசாமலேயே ரன்னரை ரன் அவுட் செய்து காலிறுதிக்கு முன்னேறிய மே.இ.தீவுகள்: ஜிம்பாப்வே கேப்டன் கண்ணீர்

சிட்டகாங்கில் இன்று நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்திய அணி சர்ச்சைக்குரிய முறையில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

கடைசி ஓவரில் ஜிம்பாவே வெற்றிக்குத் தேவை 3 ரன்கள். ‘டை’ செய்ய 2 ரன்கள். அப்போது மேற்கிந்திய பவுலர் கெமோ பால் கடைசி ஓவரை வீச வந்தார்.

ஜிம்பாப்வே வீரர் குண்டாய் மடிஜிமு (10 ரன்கள்) பேட்டிங் முனையில் இருந்தார், ரன்னர் முனையில் ரிச்சர்ட் என்கரவா என்பவர் இருந்தார்.

இந்நிலையில் மே.இ. வீச்சாளர் கெமோ பால் ஓடி வந்து பந்து வீசாமலேயே ரன்னர் முனையில் இருந்த பேட்ஸ்மெனை ரன் அவுட் செய்தார். அதாவது ரன்னர் முனை பேட்ஸ்மென் சாதாரணமாகவே முன்னேறியதாகவே தெரிகிறது, எப்படியாவது ரன் எடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் ரன்னர் முனை கிரீசை விட்டு அவர் கிளம்ப நினைத்ததாக தெரியவில்லை. ஆனால் பவுலர் கெமோ பால் ரன்னர் முனை பைல்களை தட்டி விட்ட போது ரன்னர் முனையில் இருந்த வீரரின் மட்டை கிரீஸின் மீது இருந்தது, கிரீஸுக்குள் இல்லை. இதனையடுத்து நடுவர்கள் இருவரும் விவாதித்தனர், மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மையரிடம் முறையீட்டை தக்க வைக்கிறீர்களா என்றனர், அவர் ஆம் என்றார். இதனையடுத்து மூன்றாம் நடுவர் ரிவியூவுக்குச் சென்றது, அதில் ரன்னர் முனை பேட்ஸ்மெனின் பேட் கிரீசுக்கு மேல் இருந்தது தெரியவந்தது. இதனால் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். இது ரன் அவுட் என்றாலும் கிரிக்கெட்டில் ‘மன்கடட்’ என்றுதான் கிரிக்கெட்டில் அழைக்கப்படுகிறது.

இது விதிப்படி சரியானதுதான் என்றாலும் எதிரணியினருக்கு சமவாய்ப்பு கொடுத்து வீழ்த்தும் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று இது சர்ச்சைக்குள்ளானது.

வெற்றி பெறத் தேவையான 227 ரன்களுக்குப் பதிலாக கடைசி ஓவரின் முதல் பந்து வீசப்படாத நிலையிலேயே ஜிம்பாப்வே 224 ரன்களுக்கு முடிந்து தோல்வி அடைந்தது மே.இ.தீவுகள் காலிறுதிக்கு இங்கிலாந்து அணியுடன் முன்னேறியது.

பரிசளிப்பு விழாவிற்கு ஜிம்பாப்வே கேப்டன் மவுதா பேச அழைக்கப்பட்ட போது கண்களில் கண்ணீருடன் குரல் மங்கி பேச முடியாமல் தவித்தார். கடைசியில் ஏதோ பேசிவிட்டுச் சென்றார்.

ஒரு முறை தென் ஆப்பிரிக்க வீரர் பீட்டர் கர்ஸ்டனை கபில்தேவ் இருமுறை எச்சரிக்கை செய்தும் அவர் பணியாததால் கடைசியில் பந்து வீச வருவது போல் வந்து ரன்னர் முனை பைல்களை அகற்றினார். இதனால் பீட்டர் கர்ஸ்டன் அவுட் ஆனார்.

1987 ரிலையன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாக் அவுட் போட்டியில் பாகிஸ்தானின் கடைசி வீரர் பந்து வீசும் முன்னரே கிரீசை விட்டு குடுகுடுவென ஓடி முன்னேறிய போது ஓடி வந்த மே.இ.தீவுகள் கார்ட்னி வால்ஷ், அவரை ரன் அவுட் செய்திருந்தால் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ். ஆனால் கார்ட்னி வால்ஷ் அந்த பாக். வீரரை கிரீசிற்குள் செல்லுமாறு கூறினார். கடைசியில் இதனால் மேற்கிந்திய அணி தோற்றது, வெளியேறியது.

ஆனால் இந்த இளம் மே.இ.தீவுகள் அணி காலிறுதிக்கு நுழைவதற்காக எதிரணியின் கடைசி வீரரை பந்து வீசாமலேயே ரன்னர் முனையில் ரன் அவுட் செய்து காலிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணியில் ஸ்பிரிங்கர் என்ற வீரர் 71 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 61 ரன்களை அதிகபட்சமாக எடுக்க அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் மகரிரா 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் ஸ்னைடர் அதிகபட்சமாக 52 ரன்களை எடுத்தார். ஐவீஸ் 37 ரன்களையும், கீஃபி 43 ரன்களையும் எடுக்க ஜிம்பாப்வே வெற்றிக்கு அருகில் வந்து 49-வது ஓவர் முடிவில் 224/9 என்று இருந்தது. அப்போதுதான் இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்து என்கரவா தகாத வழியில் ரன் அவுச் செய்யப்பட்டார்.

மே.இ.தீவுகள் தரப்பில் ஏ.எஸ்.ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசியில் யார்க்கர்களை அபாரமாக வீசிய ஸ்பிரிங்கர் 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x