Published : 22 Jul 2021 06:23 PM
Last Updated : 22 Jul 2021 06:23 PM
1936-ம் ஆண்டில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பிறகு 36 ஆண்டுகள் கழித்து, 1972-ம் ஆண்டில் மீண்டும் ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது ம்யூனிக் நகரில். ஹிட்லரின் இனவெறியால் சர்வதேச அளவில் பெரும் தலைக்குனிவைச் சந்தித்த ஜெர்மனி, ம்யூனிக் ஒலிம்பிக் போட்டியின் மூலம் ‘சரித்திரத்தின் கருப்பு ஒலிம்பிக்’ என்ற பெயரைப் பெற நேர்ந்தது.
ஒலிம்பிக் போட்டிக்காக ம்யூனிக் நகரில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டிருந்தது. இப்போதுபோல அப்போதெல்லாம் பெரும் பாதுகாப்பு கெடுபிடிகளோடு ஒலிம்பிக் போட்டிகள் நடந்ததில்லை. உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. எனவே, ஒலிம்பிக்கில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதெல்லாம் அரிது. ஆனால், ம்யூனிக் ஒலிம்பிக் வரலாற்றை மாற்றி எழுதியது.
ம்யூனிக் ஒலிம்பிக் கிராமத்தில்தான் எல்லா நாட்டு வீரர், வீராங்கனைகளும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 1972, செப்டம்பர் 5 அதிகாலையில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல், விளையாட்டு வீரர்களைப்போல உடையணிந்துகொண்டு ஒலிம்பிக் கிராமத்தில் புகுந்தது. இஸ்ரேல் அணியினர் தங்கியிருந்த அறைகளுக்குச் சென்ற அந்த மர்ம கும்பல், கைப்பைகளில் மறைத்துக் கொண்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் அறைகளுக்குள் புகுந்தது. தூக்கத்தில் இருந்த இஸ்ரேலிய வீரர்கள், சத்தம் கேட்டு எழுந்தனர். ஆனால், கையில் இருந்த ஆயுதங்களைக் கண்ட அதிர்ச்சியில் உறைந்த வீரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கிருந்த மல்யுத்தம், பளுதூக்கும் வீரர்கள் உள்பட 11 இஸ்ரேலியர்களை அந்த கும்பல் பிணையக் கைதிகளாகப் பிடித்தது.
பின்னர்தான் இந்த மர்ம கும்பல் ‘பிளாக் செப்டம்பர்’ என்ற பாலஸ்தீன தீவிரவாதக் கும்பல் என்பது தெரியவந்தது. இஸ்ரேல் சிறையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை விடுவிக்கக் கோரி, இந்தச் சம்பவம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ம்யூனிக் நகரை மையமாக வைத்து இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. முடிவு தெரியாத நிலையில், முதலில் 2 பிணையக் கைதிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
பின்னர் எஞ்சியவர்களை பாலஸ்தீனம் கொண்டு செல்லத் தீவிரவாதிகள் முயன்றனர். ம்யூனிக் விமான நிலையத்தில் துப்பாக்கி முனையில் வீரர்களை அழைத்துவந்தபோது, ஜெர்மனி ராணுவம் அவர்கள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியது.
அந்தத் தாக்குதலில் வீரர்கள், பயிற்சியாளர்கள், தீவிரவாதிகள் என எல்லோரும் மரணமடைந்தனர். இந்தக் கொலைகளால் ரத்தச் சகதியாக மாறிய ம்யூனிக் ஒலிம்பிக், ஒரு சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் போட்டிகள் தொடங்கியபோது ஒலிம்பிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. பலத்த பாதுகாப்போடு ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தபோதிலும் ஒலிம்பிக் வரலாற்றில் அது கரும்புள்ளியாகவே இன்றும் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT