Published : 27 Feb 2016 04:21 PM
Last Updated : 27 Feb 2016 04:21 PM
நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக வசைமழை பொழிந்ததாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கொதித்தெழுந்துள்ளார்.
எல்லைக்கோட்டருகே பீல்ட் செய்த ஜோஷ் ஹேசில்வுட் உட்பட மற்றொரு பவுலர் ஆகியோரை கிறைஸ்ட்சர்ச் டெஸ்டின் போது ரசிகர்கள் ஆபாசமான வசைமொழியினால் திட்டினார்கள் என்று டேவிட் வார்னர் ஆவேசமடைந்துள்ளார்.
இது குறித்து ஏபிசி-க்கு டேவிட் வார்னர் கூறியதாவது:
உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, வீரர்களுக்கு சில வசைகள் வந்து விழும் என்பது தெரிந்ததே. ஆனால் நாள் முழுதும், 6 மணி நேரம் 7 மணிநேரத்துக்கு குடும்பத்தையெல்லாம் இழுத்து வசைபாடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதுவும் மிக மோசமான, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எல்லை மீறினர். அதாவது என்னுடைய 2 மகள்கள் ஸ்டேடியத்தில் இருந்தால் நான் அவர்களை அங்கு இருக்க அனுமதிக்க மாட்டேன், காரணம் அவ்வளவு மோசமான வார்த்தைகளை நியூஸிலாந்து ரசிகர்களில் சிலர் பிரயோகிக்கின்றனர்.
ஆஸ்திரேலிய வீரர்களின் மனைவி, தோழிகள் என்று இவர்கள் ஆபாச வார்த்தைகளுக்கு தப்புபவர்கள் இல்லை என்றே கூறிவிடலாம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று வார்னர் பேசியுள்ளார்.
ஜோஷ் ஹேசில்வுட் இந்த வெறுப்பில்தான் ஒரு போட்டியின் போது கள நடுவரிடம், “who the f...is the third umpire?" என்று ஆவேசப்பட்டு 15% அபராதம் விதிக்கப்பட்டார். ஸ்டீவ் ஸ்மித்தும் ஒழுக்க விதிமீறல் செய்ததாக அபராதம் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது புதிதல்ல.
ஸ்டீவ் வாஹ் காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு நாட்டு ரசிகர்களும் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது தங்கள் காட்டத்தை காட்டத் தவறியதில்லை. இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் எதிரணியினரிடம் நடந்து கொள்ளும் விதமும் ஒரு காரணம் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT