Published : 22 Jul 2021 01:54 PM
Last Updated : 22 Jul 2021 01:54 PM
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலால் ஒதுக்கப்பட்டவர்தான் தீபக் சஹர். ஆனால், இன்று ஒற்றை வீரராக இருந்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் நேற்று முன்தினம் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சஹரும், 9-வது பேட்ஸ்மேனாக வந்த புவனேஷ்வர் குமாரும்தான்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது, ஆட்டமும் இலங்கை பக்கம் சென்றுவிட்டது.
ஆனால், அதைத் தக்கவைத்துக் கொள்ளாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால், வெற்றி கைநழுவிப் போனது. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து கடைசி 10 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்து அணியை வெற்றியின் பக்கம் கொண்டுவந்தனர். தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
''இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிரேக் சேப்பல் விலகியபின், ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சியாளராக கிரேக் சேப்பலை, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி நியமித்தார்.
அப்போது தீபர் சஹரை ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யாமல் நிராகரித்தவர் கிரேக் சேப்பல். அதுகுறித்துக் காரணம் கேட்டபோது, தீபக் சஹருக்குப் போதுமான உயரம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, வேறு வேலை இருந்தால் பார்த்துக் கொள்ளுமாறும் கிண்டலாகத் தெரிவித்தார். ஆனால், பந்துவீச்சாளராகப் பயிற்சி பெற்ற தீபக் சஹர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தனி ஆளாக இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
சில விதிவிலக்குகளும் உள்ளன. ஆனால், இந்தியாவில் பிரமாதமான திறமை கொண்ட அணிகள், வீரர்கள், பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைப் பரிசீலனை செய்யுங்கள்.
இந்தக் கதையின் மூலம் தெரிந்துகொள்வது என்னவென்றால், உங்களை மட்டும் நம்புங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர் சொல்வதையெல்லாம், அவர்களையெல்லாம் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”.
இவ்வாறு வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT