Published : 21 Jul 2021 08:56 AM
Last Updated : 21 Jul 2021 08:56 AM
இந்திய அணியின் பயி்ற்சியாளர் ராகுல் திராவிட் என்மீது வைத்துள்ள நம்பிக்கைதான் என்னை சிறப்பாக பேட்டிங் செய்ய வைத்தது அணியை வெற்றி பெறவும் வைத்தது. அவர்கூறியபடி செய்தேன், வெற்றி பெற்றோம் என்று இந்திய அணி வீரர் தீபக் சஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் இலங்கை மண்ணில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததில்லை எனும் வரலாற்றை தக்கவைத்துக் கொண்டது.
இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தொடர்்ந்து 9-வது முறையாக ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக 93 ஒருநாள் போட்டிகளில் வென்று ஓர் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைக் குவித்த அணி என்ற வரலாற்றையும் இந்திய அணி பெற்றுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சஹரும், 9-வது பேட்ஸ்மேனாக வந்த புவனேஷ்வர்குமாரும்தான்.
தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். அவருக்குத் துணையாக ஆடிய புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றி குறித்து தீபக் சஹர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த போட்டியை வென்று கொடுப்பதைத் தவிர சிறந்த பரிசாக நாட்டுக்கு ஏதும் இருக்காது என நான் நினைத்தேன். நான் களமிறங்கியபோது, பயிற்சியாளர் ராகுல் திராவிட் சார் என்னிடம் கடைசிப்பந்துவரை விளையாடு, ஆட்டமிழந்துவிடாதே, பொறுமையாக பேட் செய் என்று கூறினார். அவர் அறிவுரைப்படி ஆடினேன், வெற்றி பெற்றோம்.
இந்திய ஏ அணிக்காக சில போட்டிகளை திராவிட் பயிற்சியின் கீழ் விளையாடி இருக்கிேறன். என்னுடைய பேட்டிங் மீது திராவிட் வைத்த நம்பிக்கைதான் என்னை சிறப்பாக பேட் செய்ய வைத்தது.
7-வது வீரராக களமிறங்கி பேட் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று திராவிட் என்னிடம் தெரிவித்தார். என் மீது திராவிட் நம்பிக்கை வைத்திருந்தார். அடுத்துவரும் போட்டிகளில் நான் பேட் செய்ய வேண்டியது இருக்காது, நான் 50ரன்களை எட்டியபோதே நாங்கள்வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஒவ்வொரு பந்தாகப் பார்த்து ஆடினேன்.
பந்துவீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்டோம், 270 ரன்களுக்குள் தடுத்துவிட்டோம். இந்த மைதானத்தில் இது நல்ல ஸ்கோர்தான். இந்தப் போட்டியில் அணிக்கு வென்று கொடுப்பதைவிட நல்ல பரிசு ஏதும் இருக்காது என்றுநினைத்து விளையாடினேன் வெற்றி பெற்றோம்”
இவ்வாறு சஹர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT