Published : 01 Feb 2016 03:56 PM
Last Updated : 01 Feb 2016 03:56 PM

டி20-யில் இந்தியப் பந்துவீச்சு ஒருவழியாக நிலைப்பெற்றுள்ளது: தோனி மகிழ்ச்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை 3-0 என்று இந்திய அணி கைப்பற்றியதையடுத்து இந்திய அணியின் பந்து வீச்சு ஒருவழியாக நிலைத்தன்மை அடைந்துள்ளது என்று நம்பர் 1 இடத்துக்கு முன்னேறிய இந்திய அணியின் கேப்டன் தோனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"இந்தத் தொடரின் கண்டுபிடிப்பு என்னைப் பொறுத்தவரையில் பும்ராதான். கடைசி 3 போட்டிகளில் அவர் வீசிய விதம் அபாரமானது. கடைசி போட்டியிலும் கூட நன்றாக யார்க்கர்களை அவர் வீசினார். குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் வெற்றியடைய யார்க்கர்களை சிறப்பாக வீசுவது அவசியம். ஒருவர் யார்க்கர் வீச முடிவு செய்கிறாரோ அல்லது இல்லையோ அந்த திறமை இருப்பது அவசியம், ஒருவேளை அந்தத் திறமை இல்லையெனில் வேகப்பந்து வீச்சாளர் கடினப்பாட்டை சந்திக்க நேரிடும்.

எனது மிகப்பெரிய கவலையே இந்திய அணியின் பவுலிங் தான். அதுவும் குறிப்பாக அயல்நாடுகளில். ஆனால், இப்போது டி20-யில் பவுலிங் யூனிட் செட்டில் ஆகிவிட்டதாகவே நான் கருதுகிறேன். பந்துவீச்சு வரிசை பற்றிய கவலை இனி எனக்கில்லை. ஓரிரு மாற்றங்களைச் செய்யலாம். மேலும் ஒரு ஸ்பின்னரை எடுக்கலாம் அல்லது ஒரு மீடியம் பாஸ்ட் பவுலரை அணியில் சேர்க்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த பவுலிங் யூனிட் நன்றாக உள்ளது.

மீண்டும் மீண்டும் ஒரு சில பவுலர்களுக்கே வாய்ப்பளித்தோம் முடிவும் மாறாமலேயே இருந்தது, இதனையடுத்தே உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக வீசும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்தோம்.

மேலும் இங்கு வந்து வீசிவிட்டு இந்தியா திரும்பும் போது அவர்கள் மேலும் திருத்திச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய இடங்களை அறிந்திருப்பார்கள். ஆனால் இவர்கள் தங்கள் பீல்டிங்கை மேம்படுத்துவதும் அவசியம்.

பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் இந்திய டாப் ஆர்டர் சீராக சிறப்பாக விளையாடி வருகிறது. இவ்வாறு சீராக ஆடுவது ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் கடினம். 5,6, 7 பேட்டிங் வரிசையினருக்கு 12-15 பந்துகளே வாய்ப்பு கிடைத்தது அந்த அளவுக்கு டாப் ஆர்டர் பேட்டிங் இந்தத் தொடரில் அருமையாக அமைந்தது.

ரெய்னா பின்னால் ஆடுவதில் அபாயகரமான வீரர், யுவராஜ் போகப்போக இன்னும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். மொத்தத்தில் திருப்திகரமான ஒரு வெற்றியாகும் இது" என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x