Published : 20 Jul 2021 02:16 PM
Last Updated : 20 Jul 2021 02:16 PM
இந்தியாவிலிருந்து எந்த அணி எங்கு சென்றாலும் அது பி டீம் கிடையாது. இங்கிலாந்தில் இருக்கும் கோலி தலைமையிலான அணியைக் கூட தவண் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தும் வலிமை கொண்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் சென்று 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, இலங்கைக்கு 2-ம் தர இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார். இதற்கு இலங்கை வாரியமும் பதிலடி கொடுத்தது. அந்நாட்டு முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வாவும் இந்திய அணிக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தவண் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இன்று நடக்கும் 2-வது ஆட்டத்தில் வென்றால், ஒருநாள் தொடரைக் கைப்பற்றும்.
ரணதுங்காவின் பேச்சுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இந்திய அணியைப் பார்த்து சிறிது மரியாதையில்லாமல்தான் ரணதுங்கா பேசியுள்ளார். அவரைப் பொறுத்தவரை இந்திய அணி பி டீமாக இருக்கலாம். ஆனால், இந்திய அணியின் வலிமை என்பது, இந்தியாவிலிருந்து எந்த அணியை எங்கு அனுப்பினாலும் அது பி டீமாக இருக்காது. இது ஐபிஎல் டி20 தொடரின் பயன்தான் வீரர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.
ஏராளமான, பலவிதமான திறமையுள்ள வீரர்களை ஒருங்கிணைத்து ஒரு அணியாக உருவாக்கியுள்ளோம். இந்த அணி அனைத்து விதங்களிலும் திறமையானது.
பிசிசிஐ வாரியத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் நன்றி செலுத்த வேண்டும். இலங்கைக்கு எதிராக இப்போதுள்ள இந்திய அணி விளையாட மறுத்திருந்தால், இலங்கை கிரிக்கெட் வாரியம் பல கோடி ஸ்பான்ஸர்ஷிப்பை இழந்திருக்கும்.
தவண் தலைமையிலான இந்திய அணியை பி டீம் என்று கூறமாட்டோம், நாங்கள் ஏற்கவும் மாட்டோம். இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான சீனியர் அணியைக் கூட வென்றுவிடும் திறமை தவண் தலைமையிலான அணிக்கு இருக்கிறது. ஆதலால், பி டீம் என நினைக்கமாட்டேன்.
இந்த அணியை அனுப்பியதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ அமைப்புக்கு நன்றி கூற வேண்டும். எங்களிடம் அணி வீரர்கள் இல்லை. இங்கிலாந்து பயணம் இருக்கிறது என்று பிசிசிஐ எளிதாக இலங்கை வாரியத்திடம் தெரிவித்திருக்கலாம்.
அவ்வாறு கூறாமல் அணியை அனுப்பியுள்ளார்கள். இந்திய அணி வந்து விளையாடுவதன் மூலம் இலங்கை வாரியத்துக்கு விளம்பரம் கிடைக்கிறது. வீரர்களுக்கும் ஊதியம் கிடைக்கும். இந்திய அணி செல்ல மறுத்திருந்தால் ஏராளமான இழப்பு இலங்கை வாரியத்துக்கு ஏற்பட்டிருக்கும்''.
இவ்வாறு வீரேந்திர சேவாக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT