Last Updated : 19 Jul, 2021 06:03 PM

 

Published : 19 Jul 2021 06:03 PM
Last Updated : 19 Jul 2021 06:03 PM

ஒலிம்பிக் நினைவலைகள் 2: ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி!

இன்றும் நம்மூர்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், பொங்கல் விழா, குடியிருப்புச் சங்கங்களில் நடைபெறும் விழாக்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு விளையாட்டு கயிறு இழுக்கும் போட்டி. இந்தக் கயிறு இழுக்கும் போட்டி ஒலிம்பிக்கிலும் இடம் பெற்றிருந்தது என்று சொன்னால், உங்களுக்கு நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையில் கயிறு இழுக்கும் போட்டி ஒலிம்பிக்கில் விளையாடப்பட்டது.

‘டக் ஆஃப் வார்’ என்றழைக்கப்பட்ட இந்தக் கயிறு இழுக்கும் போட்டி 1900 முதல் 1920 வரை ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. இந்த விளையாட்டுப் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அணிகளை கிளப் என்றே அழைத்தார்கள். பல கிளப்புகள் ஒரே நாட்டின் பெயரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன. 1900 பாரீஸ் ஒலிம்பிக்கில்தான் கயிறு இழுக்கும் போட்டி அறிமுகமானது. அந்த ஒலிம்பிக்கில் ஸ்வீடன், டென்மார்க், பிரான்ஸ் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றன.

1904 செயின்ட் லூயிஸ் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் அமெரிக்காவே வென்றது. இதேபோல 1908 லண்டன் ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்களையும் இங்கிலாந்தே வென்றது. 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் ஸ்வீடனும் இங்கிலாந்தும், 1920 அன்வெர்ப் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் பதக்கங்களை வென்றன.

1920ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறைய போட்டிகள், நிறைய பங்கேற்பாளர்கள் என்ற முடிவை ஒலிம்பிக் கமிட்டி எடுத்தது. அதற்காக பழைய விளையாட்டுப் பிரிவுகளை நீக்க முடிவு செய்தது. அதில் கயிறு இழுக்கும் போட்டியும் நீக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் கயிறு இழுக்கும் விளையாட்டுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருந்ததன் மூலம், அதன் பெருமை காலம் உள்ளவரை பேசப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x