Published : 19 Jul 2021 04:54 PM
Last Updated : 19 Jul 2021 04:54 PM
கொழும்பு நகரில் நாளை நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை வென்று 14 ஆண்டு கால சாதனையைத் தக்கவைக்கும் முயற்சியில் ஷிகர் தவண் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இலங்கைக்கு எதிரான இந்த ஒருநாள் உலகக் கோப்பை தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் வெற்றியும், தொடரை வெல்வதும் முக்கியமாகும். கொழும்புவில் நேற்று நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இதனால், இந்திய அணி 7 போட்டிகளி்ல் 4 வெற்றி, 3 தோல்வி என 39 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா 40 புள்ளிகளுடன் முறையே 3-வது 4-வது இடத்தில் உள்ளன. நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு நகரக்கூடும்.
இலங்கைக்கு எதிராக 2007-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது இல்லை. நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வென்றால், தொடர்ச்சியாக 9-வது ஒருநாள் தொடரைக் கைப்பற்றும்.
ஓர் அணிக்கு எதிராக அதிகமான தொடரை வென்ற அணிகளில் பாகிஸ்தான் 11 தொடர்களை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வென்றுள்ளது. 2-வதாக மே.இ.தீவுகளுக்கு எதிராக 2007 முதல் 2019ஆம் ஆண்டுவரை 10 ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது.
தற்போது இலங்கை அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்ற நிலையில் நாளைய ஆட்டத்தில் வென்றால் அது 9-வது தொடராக அமையும். 14 ஆண்டு கால சாதனையை இந்திய அணி தக்கவைக்கும்.
இந்திய அணியைப் பொறுத்துவரை பேட்டிங் வலுவாக இருக்கிறது. நடுவரிசையில் மணிஷ் பாண்டே மட்டும்தான் சொதப்பியுள்ளார். தன்னை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைத்தும் கடந்த ஆட்டத்தில் கோட்டைவிட்டார் மணிஷ் பாண்டே. அவர் களமிறங்கும் இடத்தில் சூர்யகுமார் யாதவை களமிறக்கலாம். அடுத்த இரு போட்டிகளும் மணிஷ் பாண்டே அவரின் திறமையை நிரூபிக்க கடுமையாகப் போராட வேண்டும்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் இருவரும் சேர்ந்து ஒருநாள் போட்டியில் நேற்று களமிறங்கினர். இருவரும் பழைய ஃபார்முக்குத் திரும்பிய நம்பிக்கையில் பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது ஆறுதலாக அமைந்தது. இவர்களின் திணறவிடும் பந்துவீச்சு அடுத்த போட்டியிலும் தொடரும் என நம்பலாம். புவனேஷ்வர் குமார் கடந்த போட்டியில் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசவில்லை, யார்க்கர்களை வீச முயன்றும் சரியாக கிடைக்கவில்லை.
இலங்கையின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அதிகமான ரன்களைக் கோட்டை விட்டனர். இதைத் தடுத்திருந்தால், இலங்கை அணி 220 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். குர்னல் பாண்டியா கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினார், 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அடுத்துவரும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்து வருகிறார்.
இலங்கை அணி சுமாராகத் தொடங்கினாலும், நடுவரிசை ஸ்திரமான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அணியில் அனுபவமில்லாத பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால்தான் பந்துவீச்சு, பேட்டிங்கில் இந்திய அணியின் கை ஓங்கி இருக்கிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை அடித்தால்தான் இந்திய அணிக்கு இலங்கை அணியால் நெருக்கடி கொடுக்க முடியும். இல்லாவிட்டால் இந்திய அணியின் ஆதிக்கமே இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT